Published : 12 Jun 2019 07:33 PM
Last Updated : 12 Jun 2019 07:33 PM
ஆம்பூர் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருவதால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் தண்ணீர் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து குடிநீர் கேன்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. பல வகையான பெயர்களில் குடிநீர் கேன்கள் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எனக்கூறி உப்பு தண்ணீரை கூட பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் கும்பல் வேலூரில் பெருகி வருகிறது.
இந்நிலையில், ஆம்பூர், உமராபாத், மின்னூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற குடிநீர் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் மார்க்கெட் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆம்பூர் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கிய பிரபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த சில நாட்களாக ஆம்பூர் புதிய பேருந்து நிலையம், நேதாஜி நகர், உமர் ரோடு, ஓ.வி.ரோடு, புறவழிச்சாலை, கஸ்பா பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில், தரமற்ற பாட்டில்களில், தரமற்ற தண்ணீர் நிரப்பப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடைக்காரர்களிடம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது போன்ற தண்ணீர் கேன்களை விநியோகம் செய்வது யாரென விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
அதில், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த அத்தனான் (50) என்பவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு 2 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து ஆம்பூர், வாணியம்பாடி, உமராபாத் போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.
குடிநீர் ஆலை நடத்துவதற்கான எந்த உரிமத்தையும் அவர் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள், தண்ணீரை நிரப்பும் கேன்கள், மூடிகள், பிரபல தண்ணீர் நிறுவனத்தின் பெயரில் போலியாக அச்சிடப்பட்ட லேபிள்கள், மூடிகள் என சுமார் ரூ.2 ல்டசம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தண்ணீர் ஆலைக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக ஆலை உரிமையாளர் அத்தனானிடம் உணவுப் பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் மட்டுமின்றி வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை போன்ற பல இடங்களில் தரமற்ற தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT