Published : 10 Jun 2019 06:50 PM
Last Updated : 10 Jun 2019 06:50 PM
டெல்லியிலிருந்து வந்த அழைப்பின் பேரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது. இச்சூழலில் பிரதமர் மோடி மீதான எதிர்ப்பு நிலையை மாற்றி பதவியேற்பு நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சரைச் சந்திக்க நேரம் கோரியிருந்தார்.
இதற்கிடையே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேரில் சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவையடுத்து நிகழ்வுகளில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றிருந்தார். அப்போது டெல்லியிலிருந்து திடீர் அழைப்பு வந்தது. மாலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்ட தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "புதுச்சேரிக்கு நிதி தொடர்பாக நீண்டகாலமாக உள்ள பிரச்சினைகளை முழுமையாகத் தெரிவித்தேன். நீண்டகாலமாக கடன் விஷயத்தில் புதுச்சேரி சிக்கியுள்ளது தொடர்பாகவும், கடன் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தினேன். இதையடுத்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நிதிப் பிரச்சினைகளை எவ்வளவு விரைவாக தீர்வு காணஇயலுமோ அதற்கான நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி தந்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT