Published : 07 Jun 2019 12:00 AM
Last Updated : 07 Jun 2019 12:00 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.150 கோடிமதிப்புள்ள சொத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா மாறுதல் செய்து தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக பல ஆயிரம் கோடி மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் உள்ளன. இதில், மதுரை பொன்மேனியில் உள்ள 14 ஏக்கர் நிலமும் அடங்கும். இந்த நிலம் தற்போது ரூ.150 கோடி மதிப்புள்ளதாகும்.
இந்த நிலத்தில் 4 ஏக்கரில் மட்டும் மீனாட்சியம்மன் கோயிலின் மேற்பார்வையில் குத்தகைதாரர்கள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இந்த நிலத்தை தனி நபர்கள், வருவாய் அதிகாரிகள் உதவியோடு முறைகேடாக பட்டா மாறுதல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பட்டா மாறுதலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பட்டா மாறுதல் செய்யப்பட்ட இந்த நிலத்துக்கான அனைத்து அசல் ஆவணங்களும் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திடம் உள்ளன. ஏற்கெனவே இந்தச் சொத்தை 6 மாதத்துக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து அதைக் கண்டுபிடித்துவிட்டார்.
அதனால், இந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்வது ஏற்புடையது அல்ல, சட்ட விரோதமானது என்று கண்டித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவையும் மீறி வருவாய்த் துறை அதிகாரிகள் மோசடியாக தற்போது பட்டா மாறுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் தரப்பில் இருந்து ஆட்சியருக்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
துணைபோகும் அதிகாரிகள் நிலம் மற்றும் இடங்களுக்கு பட்டா மாறுதல் கோரி அதன் உரிமையாளர்கள் பலர், உண்மையான ஆவணங்களைக் கொண்டு தாலுகா அலுவலகங்களை நாடினால் அதற்கு தேவையற்ற சாக்கு போக்குகளைக் கூறி பட்டா மாறுதல் செய்யாமல் தட்டிக்கழிக்கும் நிலைதான் இன்று நிலவுகிறது.
அதேநேரத்தில் போலியான ஆவணங்களைத் தயார் செய்வதற்கும், அதன் மூலம் பட்டா மாறுதல் செய்வதற்கும் சிலர் புரோக்கர்களை நாடும்போது எளிதாக பட்டா மாறுதல் நடந்துவிடுகிறது. இதற்குக் காரணம், புரோக்கர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கைகோத்துக் கொண்டு முறைகேட்டுக்கு துணை புரிகின்றனர்.
பட்டா மாறுதல் முறைகேடு தொடர்பாக காவல்நிலையங்களிலும், மாவட்ட வருவாய் அலுவலர் நடத்தும் நீதிமன்றங்களிலும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருவாய்த் துறையில் நிலவும் லஞ்ச ஊழலை ஒழித்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT