Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM
கோவை மாவட்ட கல்லூரிகள் நாளை (ஜூன் 17) திறக்கப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களை ‘ராகிங்' செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனியர் மாணவர்களுக்கு காவல்துறை, பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
கோவையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் என 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, வெளியூர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் 2019-2020-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முதல்கட்டமாக நிறை வடைந்துள்ளது. இதற்கிடையில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்தொடர்ச்சியாக கலை, அறிவியல் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்து முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ‘ராகிங்' எனப்படும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சீண்டல்களில் ஈடுபடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்கு காவல் துறைமற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
“பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவின்படி, பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல்படி கல்லூரிகளில் ராக்கிங் தடுப்புக்குழு அமைக் கப்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் ‘ராகிங்' தடுப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும். வளாகத்தில் ‘ராகிங்' விழிப்புணர்வு தகவல்களை ஒட்டி வைக்க வேண்டும். ‘ராகிங்'கில் ஈடுபடக்கூடாது என்று சீனியர் மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தின் கடமையாகும். ‘ராகிங்' நடைபெற்றால் காவல்துறை மூலமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார், துணைவேந்தர் குழு உறுப்பினர் பி.திருநாவுக்கரசு.
“முதலாமாண்டு மாணவர்களுக்கு விடுதிகளில் நடைபெறும் ‘ராகிங்' கொடுமை வெளிச்சத்துக்கு வருவது மிகவும் குறைவு. காரணம் விடுதி காப்பாளர் மற்றும் முதல்வருக்கு புகார் சென்றால் வெளியில் தெரியாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி சமாதானம் செய்வதுடன், வெளியில் சொல்லக்கூடாது என்றும் எச்சரித்து விட்டுவிடுகின்றனர். இவ்வாறு செய்வது தவறு. அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்” என்று மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சட்டம் சொல்வதென்ன?
“தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997-ல் இயற்றப்பட்டது. அதன்பின்னர் 1999-ல் ராகிங் தடுப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ராகிங் செய்வது தண்டனைக்குரிய குற்றம். கல்லூரிகளில் ராகிங் தடுப்புக்குழு அமைக்க வேண்டும்.
இதன்படி ஜூனியர் மாணவர்களை ‘சார்' என அழைக்கச் சொல்வது, மிரட்டுவது, திட்டுவது, தங்களது வேலைகளைச் செய்ய பணிப்பது போன்ற செயல்கள் அனைத்துமே ராகிங் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் இருந்து ராகிங் புகார் வந்தால் முதல்வர் தலைமையில் மற்றும் மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி 72 மணி நேரத்துக்குள் ராகிங் நடந்துள்ளதா? என்று கண்டறிய வேண்டும்.
ராகிங் நடந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வதுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்க வேண்டும். இடைநீக்க காலத்தில் தேர்வெழுவது, உதவித்தொகை பெறுவது என மாணவருக்கான சலுகைகளை பெற முடியாது.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவர். இது குறித்து கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வித்துறைக்கு கல்லூரி நிர்வாகம் அறிக்கை அனுப்ப வேண்டும்.
காவல்துறையில் புகார் அளிக்காவிட்டால் சட்டப்பிரிவு 7-ன் படி, கல்லூரி முதல்வர் ராகிங் செய்ய தூண்டியதாகக் கருதப்படுவார். இதன்மூலம் ராகிங் செய்த மாணவர் மட்டுமின்றி, முதல்வரும் தண்டிக்கப்படுவர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். தண்டனைக்கு பிறகு வேறு எங்கும் படிக்க முடியாது” என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT