Published : 20 Jun 2019 12:48 PM
Last Updated : 20 Jun 2019 12:48 PM
சேலம் அருகே தாரமங்கலத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி ஏறி இறங்கியதில் பெண் பலியானார்.
சேலம் அருகே தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் காலனியில் கிறிஸ்டி அகல்யா ராணி என்பவர் தனது 12 வயது மகள் கிரேவியுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார்.
தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகளை வழக்கம் போல நேற்று (புதன்கிழமை) மாலை ராணி பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது தாரமங்கலம் பிரதான சாலையோரம் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே வேகமாக வந்த லாரியானது ராணியின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரி, அவர் மீது ஏறி இறங்கியதில் லாரியின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கி ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகள் கண்முன்னே ராணி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகத் தப்பித்து விட்டார். இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் இயங்கிவரும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி விபத்து ஏற்படுத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT