Last Updated : 20 Jun, 2019 12:00 AM

 

Published : 20 Jun 2019 12:00 AM
Last Updated : 20 Jun 2019 12:00 AM

கரும்பு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருஆரூரான் சர்க்கரை ஆலை: நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் வாழ்வில் கசப்பை ஏற்படுத்திய திருஆரூரான் சர்க்கரை ஆலையின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக விவசாயிகள் கரும்பை பயிரிடத் தொடங்கியதால் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, அந்த ஆலை நிர்வாகம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலையை கடந்த 1988-ல் தொடங்கியது.

தொடக்கத்தில் நன்கு செயல்பட்ட இந்த ஆலை, கடந்த சிலஆண்டுகளாக நிர்வாக குளறுபடிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. ஆலையில் கரும்பு அரவை செய்ததற்கான நிலுவைதொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தியது. நிலுவைத் தொகையை வங்கியிலிருந்து பெற்றுத்தருவதாகக் கூறி விவசாயிகளை வரவழைத்து, பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி, அதை பயன்படுத்திபல லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளது என்பது, கடனை திருப்பிச்செலுத்துமாறு எச்சரிக்கை நோட்டீஸ் தங்களுக்கு வந்த பின்னரேவிவசாயிகளுக்குத் தெரிய வந்தது.

இதேபோன்று, இதே நிர்வாகம் நடத்தும், கடலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையிலும் விவசாயிகள் பெயரில் வங்கியில் கடன் வாங்கியிருந்தது தெரியவந்ததால், விவசாயிகள் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட போலீஸார்ஆலை உரிமையாளர் ராம்.தியாகராஜனை கடந்த மே மாதம் 8-ம் தேதி கைது செய்து, விசாரணைக்குப் பின் விடுவித்தனர்.

இந்நிலையில், யார் யாருக்கு பணம் வழங்க வேண்டும், அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து கடந்த 10-ம் தேதி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆலை மூடப்படுவதற்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தங்கள் பெயரில் வங்கிகளில் பெறப்பட்ட கடனை ஆலை நிர்வாகம் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார் மீது நடவடிக்கை இல்லை

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டகாவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது:விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த சட்டப்பூர்வ விலையான ரூ.83.62 கோடியை இதுவரை வழங்காத திருஆரூரான் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் கடன்வாங்கி ரூ.360 கோடி மோசடி செய்துள்ளது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்தின் மீது மோசடி புகார் கொடுத்தும் வேளாண் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்திய கடன் தீர்க்க வகையற்றோர் மற்றும் நொடிப்பு நிலை வாரிய ஒழுங்கு விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பாவி விவசாயிகள் கடனாளிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகை கிடைக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 4 சர்க்கரை ஆலைகளை நடத்திவரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் திவால் அறிவிப்பு கொடுத்துள்ளது. திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு வட்டியும் முதலுமாக ரூ.149.36 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், அதை வசூலித்துத் தரும்படி சென்னையிலுள்ள தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தை வங்கிகள் அணுகியுள்ளன. அக்கடனை செலுத்த முடியாத நிலையில் ஆரூரான் சுகர்ஸ் திவால் அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு திவால் தீர்வு நடைமுறைகள், குறித்த காலத்தில் முடிவடைவதை உறுதி செய்வதுடன், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகத்திடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x