Published : 24 Jun 2019 05:27 PM
Last Updated : 24 Jun 2019 05:27 PM
சிமி அமைப்பு மீதான விசாரணையில் யாரும் சாட்சியம் அளிக்காததால் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதனால் தடை நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது.
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடையை நீட்டிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பாய நீதிபதி முக்தா குப்தா தலைமையில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த தீர்ப்பாயத்தின் விசாரணையில் யாரும் சாட்சியம் அளிக்க முன் வராததால், விசாரணை நிறைவு பெற்றது.
சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 1977-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, பல்வேறு நாசச் செயல்களில் ஈடுபட்டதை அடுத்து 2001-ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது முதலே, இந்த அமைப்பு மீதான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ல் ஐந்தாண்டுகளுக்குத் தடை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு கடந்த ஜனவரி 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.
இதையடுத்து, சிமி அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயத்தில் சனிக்கிழமை 6 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உளவுப் பிரிவு டிஐஜி ராஜேந்திரபிரசாத், கூடுதல் காவல் ஆணையர் முகமத் சஜ்ஜத்கான், ஆய்வாளர் பிரசாத்பாபு ஆகியோர் தங்கள் தரப்பில் இருந்து மூன்று மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) இறுதி நாள் விசாரணை நடந்தது. மூன்று நாட்களாக சிமி அமைப்பு மீதான தடையை நீட்டிக்கவோ அல்லது நீக்கவோ யாரும் சாட்சியம் அளிக்கவில்லை. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்குள் விசாரணை முடித்துவிட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி முக்தா குப்தா மற்றும் அதிகாரிகள் டெல்லி திரும்பினர்.
இந்நிலையில் சிமி அமைப்பு மீதான தடை நீடிக்குமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இதுதொடர்பான முடிவை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT