Published : 06 Jun 2019 12:00 AM
Last Updated : 06 Jun 2019 12:00 AM
சென்னையில் கழிவுநீர் வழிந்தோடுதல், குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிக விட்டமுள்ள புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் ரூ.386 கோடியில் நடந்து வருகின்றன.
சென்னையில் 3,530 கிலோ மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து தினமும் சராசரியாக 520 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் குடிநீர் பிரச்சினை மட்டுமல்லாமல், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுதல், குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சினைகளும் நீடிக்கிறது.
இதுகுறித்து நாளொன்றுக்கு சுமார் 100 புகார்கள் வருகின்றன. பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதால் அங்கிருந்து கழிவுநீர் பெருமளவு வெளியேறுகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் தரைக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால் அழுத்தம் காரணமாக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் நீடிக்கிறது.
தற்போது, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் சூப்பர் சக்கர் இயந்திரம் 54, சக்கர் மற்றும் ஜெட்ராடிங் வாகனங்கள் 30, ஜெட்ராடிங் – 115, தூர்வாரும் இயந்திரங்கள் 244 ஆகியவை உள்ளன. கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த கொள்ளளவு 727 மில்லியன் லிட்டர். தற்போது 500 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்தகரிக்கப்படுகிறது. இருப்பினும், கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “கழிவுநீர் குழாய்கள் உடைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண சென்னையில் ரூ.386 கோடியில் கழிவுநீர் குழாய்களை மாற்றுதல், பம்பிங்குக்காக அதிக திறன் கொண்ட மோட்டார்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக 256 கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்களில் பெரிய மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன.
ஒரு பம்பிங் ஸ்டேஷனில் இருந்து மற்றொரு பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் 600 அங்குல விட்டமுள்ள குழாய்கள் 1,000 அங்குலம் விட்டமுள்ள குழாய்களாகவும் அதுபோல தெருக்களில் பதிக்கப்பட்டுள்ள 6 அங்குல விட்டமுள்ள குழாய்கள் 10 அங்குல விட்டமுள்ள குழாய்களாகவும் மாற்றப்படுகின்றன. நிரந்தர தீர்வு அண்ணாநகர், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடக்கின்றன. அடிக்கடி புகார் வரும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சென்னை முழுவதும் குழாய்கள் புதிதாக மாற்றப்பட்டு, கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT