Last Updated : 27 Jun, 2019 01:38 PM

 

Published : 27 Jun 2019 01:38 PM
Last Updated : 27 Jun 2019 01:38 PM

மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) கல்லூரி அலுவலகத்தில் பெண் பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வக்ஃபு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று வக்பு வாரிய கல்லூரியில் 10 பெண் உதவி பேராசிரியர்கள் இடம் சிபிஐ ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக, மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் 2017-ம் ஆண்டு 7 பெண் பேராசிரியர் உட்பட 28 பேர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர் .

28 பேராசிரியர்கள் நியமனத்தில் வக்ஃபு வாரியக் கல்லூரி செயலாளராக செயல்பட்டு வரும் ஜமால் மைதீன், வக்ஃபு வாரியத் தலைவர் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் உட்பட நிர்வாகத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றதாக சர்தார் பாட்ஷா, மகபூப் பாட்ஷா, அலி அக்பர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் உதவிப் பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், சிபிஐ இந்த வழக்கை விசாரித்து ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் ஆண் பேராசிரியர்களை சிபிஐ நேரடியாக வரவழைத்து விசாரணை மேற்கொண்டது.

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை)  மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள வக்ஃபு வாரிய கல்லூரியில் பெண் பேராசிரியர்களிடம் கல்லூரி வளாகத்தில் சிபிஐ  அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x