Published : 27 Jun 2019 08:41 AM
Last Updated : 27 Jun 2019 08:41 AM
இனி பெரும்பாலான குற்றங்கள் கத்தியின்றி, ரத்தமின்றித்தான் இருக்கும். ஆம். தேசத்தின் அடுத்த பாதுகாப்பு சவால் சைபர் க்ரைம். போலீஸாரைவிட பல மடங்கு தொழில்நுட்பத்தில் முன்னேறும் சைபர் க்ரைம் குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் காவல் துறையில் தொழில்நுட்பப் புரட்சியே நிகழ வேண்டும்” என்கிறார் `மிஸ்டர் கிளீன்’ என்று புகழப்படும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஓய்வுபெற்ற டிஜிபி டி.சிவானந்தன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது.
உலக கொங்கு மைய அறக்கட்டளை சார்பில் கோவையில் நடைபெற்ற, `சமூக வலைதளங்களின் கொடிய தாக்கத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பது எப்படி’ என்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்தார் டி.சிவானந்தன்.
பொள்ளாச்சிக்காரர்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி-லஷ்மி அம்மாள் தம்பதியின் மகன் சிவானந்தன். மகாராஷ்டிர மாநில காவல் துறை டிஜிபியாகப் பொறுப்பு வகித்த இவர், மும்பை காவல் ஆணையராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். மத்திய உளவுப் பிரிவு, சிபிஐ என காவல் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் கலக்கிய இவர், நிழல் உலக தாதாக்கள், கடத்தல்காரர்கள், நக்ஸலைட்டுகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருந்த, பல்வேறு சினிமா பிரபலங்கள், பாலிவுட் நாயக, நாயகிகளை சிறையில் தள்ளியவர். அதுமட்டுமின்றி, காவலர்களின் நலன், மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது நலன்களைப் பாதுகாத்தவர். இந்திய காவல் துறையின் மகுடத்தில் வைரமாய் மிளிர்ந்த இவர், தேசத்தின் பெருமைமிகு விருதுகளைப் பெற்றுள்ளார். 2011-ல் ஓய்வுபெற்ற பிறகும் மும்பையில் வசித்து வரும் இவர், பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவரை சந்தித்தோம்.
“அப்பா மின் வாரியத்தில் பணிபுரிந்ததால் பல கிராமங்களில் குடியிருந்தோம். கிராமப் பள்ளிகளில் கல்வியை முடித்து, பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் பி.ஏ.வும், கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் எம்.ஏ.வும் படித்தேன். பின்னர், தனியார் கல்லூரியில் பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன்.
`இந்து’ நாளிதழ்தான் உதவியது...
தமிழ் மீடியத்திலேயே படித்த நான், ஆங்கிலம் பயிலக் காரணம் `தி இந்து’ நாளிதழ்தான். அதேபோல, 1975-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெறவும் உதவியது இந்து நாளிதழ். பயிற்சி முடித்த பின்னர் மகாராஷ்டிர மாநில காவல் துறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. காவல் ஆணையர், டிஜிபி என பல்வேறு பொறுப்புகளை வகித்த நான், மத்திய உளவுத் துறை, சிபிஐ-யிலும் பணியாற்றினேன்.
அப்போது மட்டுமல்ல, இப்போதும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கும், போலீஸாரின் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. எப்போதும் போதுமான அளவுக்கு போலீஸ்காரர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு, அரசை மட்டும் குறைகூற முடியாது. அரசாங்கங்கள் காவல் துறைக்கு குறிப்பிட்ட அளவுக்குத்தான் நிதி ஒதுக்க முடியும். எனவே, தொழில்நுட்ப ரீதியாக காவல் துறையை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்...
முன்பைப்போல கத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிப்பதெல்லாம் குறைந்துவிட்டது. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருடுவதுதான் அதிகரித்துள்ளது. குற்றவாளிகள் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய அளவுக்கு முன்னேறியுள்ளனர். தொழில்நுட்பத்தில் போலீஸார் மூன்று அடிகளை எடுத்து வைத்தால், குற்றவாளிகள் 10 அடிகளை எடுத்துவைக்கிறார்கள். எனவே, குற்றவாளிகளுக்கு இணையாக போலீஸாரும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிபெறுவது அவசியம். இனிமேல் சைபர் க்ரைம், சைபர் மர்டர் என எல்லாம் சைபர் மயமாகத்தான் இருக்கும். எனவே, ஒவ்வொரு போலீஸ்காரரும் கம்ப்யூட்டர், இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் தேர்ந்தவர்களாக மாற வேண்டும். இதற்கு அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போதைய சமுதாயம் பணத்தை தேடி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது நுகர்வுக் கலாச்சாரமும் இதை ஊக்குவிக்கிறது. குறுக்கு வழியில் வெகு வேகமாய் முன்னேற வேண்டுமென பலரும் நினைக்கிறார்கள். பொருளாதாரக் குற்றங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுகிறார்கள். எத்தனை கொலை, கொள்ளை செய்தாலும், இந்த அளவுக்கு தொகையை திருடிமுடியாது. எனவே, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வசாதாரணமாக கோடிகளைக் கொள்ளையடிக்கிறார்கள். ரத்தமின்றி, யுத்தமின்றி செய்யும் இந்தக் குற்றங்கள்தான், தேசப் பாதுகாப்பின மிகப் பெரிய சவாலாக இருக்கும். குற்றங்களின் எண்ணிக்கை குறையாது. ஆனால், அவற்றின் வடிவங்கள் மாறி வருகின்றன. அதிகரிக்கும் சைபர் க்ரைம், பொருளாதார க்ரைம் ஆகியவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். சிசிடிவி கேமராக்கள், கம்ப்யூட்டர்கள் என நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல, பெண்கள் மீதான குற்றங்களை, நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டும். முகத்தில் ஆசிட் ஊற்றியவரைக் கைது செய்து, சிறையில் அடைப்பது முக்கியம்தான். அதேசமயம், அந்தப் பெண்ணின் வாழ்க்கை இனி என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும். எனவே, குற்றம் நிகழும் முன் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல, பிரச்சினைகளை, தொந்தரவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு பெண் குழந்தைகளை தைரியப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களால் பெண்கள் அதிகம் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றில், முகம் தெரியாத யாராவது பாராட்டினால், அதில் மகிழ்ச்சி கொள்வதில் அர்த்தம் கிடையாது. உள்நோக்கு இல்லாமல் பாராட்டப் போவதில்லை. எனவே, இதுபோன்றவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆண்ட்ராய்ட் போனும், சமூக வலைதளங்களும் இல்லாமல்கூட நம்மால் வாழ முடியும். அதைத் தவிர்க்கவே முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. இன்டர்நெட் நமக்கு அடிமையா, நாம் இன்டர்நெட்டுக்கு அடிமையா என்பதை முடிவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், குழந்தைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். என்ன தளத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். இரவு முழுவதும் இன்டர்நெட் சாட்டிங் செய்வதால் அறிவு வளர்ந்துவிடாது என்பதைப் புரியவைக்க வேண்டும். குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து பேசி, ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். டிவி சேனல்களில் சினிமா மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல், செய்திகளைப் பார்க்க வேண்டும். இன்டர்நெட் மூலம் மட்டுமே அறிவு வளராது. புத்தகம் படிப்பதும், நாளிதழ் படிப்பதும் தகுதியை வளர்க்கும்.
இந்த தலைமுறை, ஒரு உயர்ந்த குறிக்கோளை நிர்ணயித்து, அதை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும். இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். தகுதியை வளர்த்துக் கொள்வதுடன், தன்னம்பிக்கையையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். சிறு தோல்விக்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது. இதையெல்லாம் விட ஒழுக்கமும், நேர்மையும் அவசியம். சினிமாக்காரர்களை ரோல்மாடலாக கொள்ளாமல், அறிஞர்களை, அறிவியலாலர்களை, சமூக சிந்தனையாளர்களை ரோல்மாடலாக கொள்ள வேண்டும்.
போலீஸாரே... ஏழைகளுக்கு உதவுங்கள்!
தற்போதைய போலீஸார், தங்களது இமேஜ் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கி எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் அது உதவாது. எனவே, ஒவ்வொருவருமே `மிஸ்டர் க்ளீன்’ இமேஜ் உடையவராக இருக்க வேண்டும். போலீஸாரின் பொறுப்பு மிகப் பெரியது. மக்களுக்கு நேரடியாக உதவ போலீஸாரால்தான் முடியும். எனவே, ஏழைகளுக்கு உதவ வேண்டும். வலிமையானவர்களால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படும்போது, பலவீனமானவர்கள் பக்கம் நிற்க வேண்டும். காவல் நிலையத்தில் கிரிமினல் உட்கார்ந்து கொண்டு, டீ குடித்துக் கொண்டிருந்தால், பாதிக்கப்பட்டவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு போலீஸ்காரரும் உணர வேண்டும்.
நேர்மையானவராக இருப்பது மட்டுமின்றி, செயல்திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் பணியில், பல இடங்களில் இருந்து அழுத்தம், நெருக்கடி வரும். கோரிக்கை நியாயமாக இருந்தால், அதை செய்யலாம். நியாயம் இல்லாத கோரிக்கையை ஒருபோதும் ஏற்கக்கூடாது. நீங்கள் நேர்மையாளராக இருந்தால், அழுத்தமும், நெருக்கடியும் வராது. எனது 36 வருட அனுபவத்தில், எந்த நெருக்கடியும் வரவில்லை” என்றார் சிவானந்தன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT