Published : 15 Jun 2019 12:00 AM
Last Updated : 15 Jun 2019 12:00 AM
பெற்றோர் பிள்ளைகளுக்கு வரண் தேடி திருமணம் செய்து வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கணவரைப் பிரிந்து வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்கு, 23 வயது மகன் வரன் தேடி மறுமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டியம் நகரைச் சேர்ந்தவர் மினி (44). பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் ஸ்ரீதருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சட்டப்படி பிரிந்துவிட்டனர். அப்போது இவர்களது மகன் கோகுல் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தந்தையின் பிரிவுக்குப் பிறகு கோகுல் தாயுடனே வளர்ந்தார். இப்போது அவர் பி.டெக். பட்டதாரி. பள்ளி, கல்லூரி காலத்திலேயே இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கோகுல், இப்போது கொட்டியம் பகுதியின் இந்திய மாணவர் சங்க செயலாளராக இருக்கிறார்.
சிறு வயதிலேயே தந்தையை பிரிந்த மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, மினி தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். இந்நிலையில், தனது தாய்க்கும் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்ற வேணுவுக்கும் 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார் கோகுல். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். கேரளாவில் இதை ‘புரட்சித் திருமணம்’ என்ற பெயரில் அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை 4500-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.
‘இந்து தமிழ்’ சார்பில் கோகுலிடம் பேசினோம். அவர் கூறும்போது, “அப்பா, தினமும் அம்மாவை அடிச்சு துன்புறுத்துவார். ஒரு நாள் தலையில் இருந்து அம்மாவுக்கு ரத்தம் வந்தது. என்னாச்சும்மான்னு கேட்டேன். உனக்காகத்தான் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. அம்மா எனக்காக பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அப்பா விவாகரத்து கேட்டு அம்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அம்மா என்னை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். உறவினர்கள் வீட்டில் மாறி, மாறி தங்கினோம். விவாகரத்து வழக்கு நடந்தபோது வாழ்க்கையை நடத்த அம்மா மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அம்மா ஒரு நூலத்தில் நூலகராக வேலைக்கு சேர்ந்தார். இதனிடையே, நீதிமன்றம் அப்பாவுக்கு விவாகரத்து வழங்கியது.
அதேநேரம் எங்களுக்கு ஒரு வீடு ஒதுக்க வேண்டும் என்றும் என்னுடைய படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. பின்னர் அப்பா 2014-ல் மறுமணம் செய்துகொண்டார். அம்மாவும் நானும் தனியாக வசித்து வந்தோம். என்னை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, அம்மா தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டார். நான் பி.டெக். முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவ்வளவு நாட்களாக அம்மாவுக்கு மாப்பிள்ளைதான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அம்மா இதை ஏற்க மறுத்தார். பின்னர் ஒப்புக் கொண்டார்.
அம்மாவின் தோழி ஒருவர்தான் கர்னல் வேணு சாரைப் பற்றி சொன்னார். அவருக்கும் இது 2-வது திருமணம்தான். என் அம்மா இத்தனை ஆண்டுகளாக எனக்காக தனிமையில் கஷ்டப்பட்டுவிட்டார். இப்போது அவருக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த திருப்தி கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு துணை கிடைத்து விட்டது. இனி எனக்கு எந்த ஊரில் வேலை கிடைத்தாலும் நிம்மதியாக வேலையைப் பார்ப்பேன்” என்று சொல்லும்போதே கோகுலுக்கு குரல் கம்முகிறது.
கோகுலுக்கு இன்னொரு கனவும் பாக்கி இருக்கிறதாம். தனது தாய் மினிக்கு நல்ல எழுத்தாளராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் இத்தனை நாளும் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்துவிட்டதால் எழுதுவதற்கு நேரம் வாய்க்கவில்லை. ‘‘இதுவரை அம்மாவின் மனதில் வலி மட்டுமே இருந்தது. இனி அதைத்தாண்டிய ஒரு வாழ்க்கையும் இருக்கப்போகிறது. அந்த உற்சாகத்தோடு அம்மாவை பேனா பிடிக்க வைப்பது அடுத்த இலக்கு’’ என்கிறார் கோகுல்.
இன்னமும் ஆச்சர்யத்தில் இருந்து மீளாத மினி கூறும்போது, “நான் என் கடமையைத்தான் செய்தேன். ஆனால் என் மகனோ அவனுக்கென்று ஒரு கடமையை உருவாக்கி அதை நிறைவேற்றி இருக்கிறான்” என நெகிழ்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT