Published : 27 Jun 2019 05:23 PM
Last Updated : 27 Jun 2019 05:23 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக அசையும், அசையா சொத்துக்கள் பல ஆயிரம் கோடி மதிப்பில் உள்ளது.

இந்த சொத்துக்களை இந்து அறநிலையத்துறை பராமரிக்கிறது. கோயில் சொத்துக்களை குத்தகைக்கு எடுப்போர், ஆக்கிரமிப்பு செய்வோர் நிலத்தை தங்கள் பெயருக்கு பட்டா மாற்றி முறைகேடு செய்வது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில்கூட மதுரை பொன்மேனியில் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ரூ.150 கோடி மதிப்புள்ள 14 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இந்து அறநிலையத்துறை இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியது.

ஆட்சியர் (பொ) சாந்தகுமார், அந்த புகார் கடிதத்தின் அடிப்படையில் சர்ச்சையில் சிக்கிய வருவாய்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவில்லை.

இந்நிலையில் மதுரை தெற்கு வெளிவீதியில் மீனாட்சி தியேட்டர் அருகே மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனிநபர்கள்  5 வீடுகள் கட்டியதும் வெள்ளி வீதியில் ஒரு கடையைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

நீதிமன்ற உத்தரவுப்படி அந்த 5 வீடுகளையும், ஒரு கடையையும் மீனாட்சியம்மன் கோயில் அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) மீட்டனர். கடை கட்டிய நபர், ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானார். பூட்டை உடைத்து அதிகாரிகள் மீட்டனர்.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, "5 வீடுகள், ஒரு கடை மதிப்பு தற்போதைய சந்தை மதிப்புப்படி ரூ.3 கோடி மதிப்பு இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x