Published : 07 Jun 2019 12:00 AM
Last Updated : 07 Jun 2019 12:00 AM
பட்டா மாறுதல் செய்யாததாலும், கணினி பட்டா பதிவின்போது பணியாளர்கள் செய்த தவறாலும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் (சுமார் 75 சதவீதம்) ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறு, சிறு விவசாயிகளின் நலனுக்காக ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ என்ற திட்டம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் வழங்கும் நிதியுதவித் திட்டத்தை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 15 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் விவசாயியின் பெயரிலே நிலப் பட்டா இருக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவையும் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பட்டா மாறுதல் செய்யாததாலும், கணினி பட்டா பதிவின்போது தற்காலிகப் பணியாளர்கள் செய்த தவறாலும் இத்திட்டத்தின் கீழ் 75 சதவீதம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவரும், முன்னாள் கிராம அதிகாரியுமான (முன்சீப்) மகாதானபுரம் வி.ராஜாராம் கூறியதாவது:1924-ம் ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன்முதலில் நில மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது நில உரிமையாளர் யார், எவையெல்லாம் கோயில் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. அப்போதுதான் சிட்டா, அடங்கல் போடப்பட்டது. சிட்டா என்பது நிலத்தின் உரிமையாளரைக் குறிக்கும். அடங்கல் என்பது நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கும். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டது.
நில உரிமையாளர்களில் குழப்பம், பிரச்சினை, விவசாயிகள் போராட்டங்கள் காரணமாக, 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆவணங்களை மேம்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சிறப்பு வட்டாட்சியரை நியமித்து, அரசு அதிகாரிகள் கிராமந்தோறும் சென்று நில உரிமையாளர் தொடர்பான விவரங்களை ஆவணங்களோடு சரிபார்த்தனர். இருப்பினும், நில உரிமையாளர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நில ஆவணங்கள் முழுமையாக சரி பார்க்கப்படவில்லை.
1983-ம் ஆண்டுக்கும் 2019-ம்ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நில ஆவணங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டதுடன், நிலத்தை விற்கும்போது பட்டா மாறுதலுக்கான தொகையை பத்திரப் பதிவு அலுவலகத்திலேயே செலுத்திவிட வேண்டும் என்றும், 10 நாட்களில் பட்டா மாற்றித் தர வேண்டும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நிலத்தை விற்கும்போது அந்தப் பதிவு மட்டும் செய்யப்பட்டதே தவிர, அந்த தகவல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு பட்டா மாறுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால், இன்னமும் ஏராளமான நிலங்கள் விற்றவர் பெயரிலே உள்ளன.
நில ஆவணங்களை சரிபார்க்கும் பணியின்போது விவசாயிகளின் அறியாமையாலும் பட்டா மாறுதல் செய்யப்படவில்லை. நில உரிமையாளர் தொடர்பான தகவல் சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் முழுமையாக அப்பணியைச் செய்யவில்லை. நில ஆவணங்களை கணினியில் பதிவு செய்த தற்காலிகப் பணியாளர்களாலும் குளறுபடிகள் நடந்துள்ளன. கணினி பதிவில் அப்பா, மகன் பெயர் மாறியது, மகள் காமாட்சி என்பதை மகன் காமாட்சி என்று பதிவிடப்பட்டுள்ளது என்பன போன்று தவறுகளின் பட்டியல் நீள்கிறது.
1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதனால், தாத்தா, அப்பா பெயரில் உள்ள நிலங்களை அவர்கள் காலத்துக்கு பிறகு அவர்களது மகன்கள் அனுபவித்து வருகின்றனர். வாரிசு சான்று வாங்கினாலோ, நிலத்தைப் பங்கு பிரித்தாலோ பெண்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்பதால் தாத்தா, அப்பா பெயரிலேயே நிலத்தை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருபவர்கள் ஏராளம்.
அந்தக் காலத்தில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு கிராமத்திலும் சாதிக்கு ஒருவர் மற்றும் அனுபவமிக்க 5 பெரியவர்களை வட்டாட்சியரே நியமிப்பார். அவர்கள் உறுதியளிக்கும் நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து தரப்பட்டது. இப்போதும் அதுபோல செய்யலாம். இல்லாவிட்டால், ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, தாலுகா அளவில் முகாம்கள் நடத்தி, வீடு விற்கும்போது மின் பயனீட்டாளர் பெயரை பத்திரத்தின் மூலம் மாற்றித் தருவது போல, பத்திரங்களில் எழுதி வாங்கிக்கொண்டு பட்டா மாறுதல் செய்து கொடுக்கலாம். இதுபோன்ற ஏற்பாட்டை உடனடியாகச் செய்யாவிட்டால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 75 சதவீத விவசாயிகள் பணம் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு ராஜராம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT