Published : 20 Jun 2019 01:18 PM
Last Updated : 20 Jun 2019 01:18 PM
தண்ணீர் தட்டுப்பாட்டால் மனிதர்கள் அலைந்து திரிந்து தண்ணீரை தேடுகின்றனர். ஆனால், கிராமங்களில் உள்ள கால்நடைகள் தண்ணீரின்றி உயிரிழந்து வருகின்றன.
இதனால் கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரைத்தேடி நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதாலும் தற்போது குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உணவு விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன.
இதேபோல், கிராமங்களில் தண்ணீரைத்தேடி மக்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மனிதர்களே தண்ணீருக்காக அலையும்போது, கால்நடைகளின் துயரத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.
அதேபோல், நகரில் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க வழியின்றி பலர் விற்று வருகின்றனர். ஆனால், கிராமங்களில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர்.
இதனால் தண்ணீர் இருக்கும் இடம் தேடி கால்நடைகளுடன் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மதுரை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ் (40) கூறியதாவது: வறட்சியால் தண்ணீரின்றி விவசாயம் செய்யமுடியவில்லை. மாற்றுத்தொழிலாக நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறோம்.
மாடுகள் தங்குவதற்கு இடம் தரும் விவசாயிகள் நிலத்தில் கிடைகள் போட்டு வருமானம் ஈட்டி வருகிறோம். தற்போது தண்ணீரின்றி யாரும் விவசாயம் செய்யவில்லை. இதனால் கிடைகள் அமைக்க வாய்ப்பின்றி வருமானம் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாட்டால் 100க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தன.
அதுபோல் இந்தாண்டும் மாடுகள் உயிரிழப்புகளை தடுக்கவும், மாடுகளை காப்பாற்றுவதற்காகவும் தண்ணீரைத்தேடி பயணம் மேற்கொள்கிறோம்.
தற்போது திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்கால் கண்மாய்க்கு வந்துள்ளோம். இங்குள்ள காய்ந்த புல், செடி, கொடிகளை உண்ணும் நாட்டு மாடுகள் இங்குள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்க்கின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT