Last Updated : 27 Jun, 2019 10:16 AM

 

Published : 27 Jun 2019 10:16 AM
Last Updated : 27 Jun 2019 10:16 AM

புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து: கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க தமிழகம் உட்பட பல மாநில எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியாலுக்கு சுமார் 42 எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு மீதான கருத்துகளை வரும் ஜூன் 30-க்குள் தெரிவிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என தமிழகத்தின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒரு மனு எழுதப்பட்டுள்ளது.

இதில், நாடாளுமன்ற இரு அவைகளின் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் 42 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். பிற மாநில எம்.பி.க்களில் காங்கிரஸ் கட்சியில் ஆறு பேரின் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது.

இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோரும் கையொப்பம் இட்டு நேரில் சென்று அளித்துள்ளனர்.

நேற்று அளிக்கப்பட்ட மனுவில், ''புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரைவின் மீது அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்பதற்கு முன் அவசரமாக அதை நடைமுறைப்படுத்தக்கூடாது'' எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மனுவில், கனிமொழி, ஆ.ராசா, டாக்டர் செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட  திமுக எம்.பி.க்களும், மாணிக் தாக்கூர், டாக்டர்.எ.செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களும் கையொப்பம் இட்டுள்ளனர்.

சிபிஐயின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் மற்றும் சு.வெங்கடேசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் கே.நவாஸ்கனி ஆகியோரும் கையொப்பம் இட்டுள்ளனர். இதுபோல், முதன்முறையான இந்தமுறை முயற்சியை ரவிக்குமார் மற்றும் மாணிக் தாக்கூர் எடுத்துள்ளனர்.

மத்திய அரசிற்கு அனைத்து கட்சிகள் சார்பில் எம்.பி.க்களால் மனு அளிக்கப்பட்டிருப்பது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x