Published : 08 Jun 2019 12:00 AM
Last Updated : 08 Jun 2019 12:00 AM
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தற்போது வரை, தமிழக அரசு அதற்கான நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. பின்னர் மதுரை தோப்பூர் தேர்வுசெய்யப்பட்டு, அங்கு இந்த மருத்துவமனை அமையும் என்று 2018-ம்ஆண்டு ஜூன் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்தடிசம்பர் 17-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தைகூட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எவ்வளவு தொகைஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு ரூ.1,264 கோடி என்றும், எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது காம்பவுண்ட் சுவர் அமைக்கவும், மண் பரிசோதனை செய்யவும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பூர்வாங்கப் பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாகவும், கட்டிட வரைபடம் இன்னும் முடிவாகவில்லை எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்துள்ளதா என்றகேள்விக்கு, இன்னும் ஒப்படைக்கவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது:நிலத்தை ஒப்படைத்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்குஅழுத்தம் கொடுக்க முடியும். மதுரை ‘எய்ம்ஸ்’-க்கு மத்தியஅமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் மருத்துவமனை செயல்பட தொடங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக நிலத்தை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிலம், ஏற்கெனவே தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்காக மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
மற்றொரு துறையிடம் இருந்து இந்த நிலத்தை பெறுவதாக இருந்தால்தான் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு அந்த துறையின் தடையில்லா சான்று தேவைப்படும். ஆனால், மாநில சுகாதாரத் துறையின் நிலத்தில் மத்திய சுகாதாரத் துறையின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் நிலம் ஒப்படைக்கப்படுவதற்கான தனி நடைமுறை தேவையில்லை. அவர்கள் தற்போதைய நிலையிலேயே கட்டுமானப் பணி களை தொடங்கலாம். ஆரம்பத்தில் 198 ஏக்கர் கொடுத்தோம். பிறகு அவர்கள் கூடுதலாக 26.24 ஏக்கர் கேட்டனர். தற்போது அதையும் கொடுத்துவிட்டோம். தற்போது கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை முடிந்துவிட்டது. மத்திய அரசு கூறிய அனைத்து நிபந்தனைகளை யும் நிறைவேற்றிவிட்டோம். எனவே, நிலம் ஒப்படைப்பு ஒரு பிரச்சினையே இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT