Last Updated : 14 Jun, 2019 10:06 AM

 

Published : 14 Jun 2019 10:06 AM
Last Updated : 14 Jun 2019 10:06 AM

நெசவுத்தொழிலில்  இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு: ஓட்டல் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் 

ஆண்டிப்பட்டியில் தறிச்சட்டத்தில் நூல்கோற்கும் பணியில் இயந்திரப்பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஓட்டல், ஜவுளிக்கடை போன்றவற்றிற்கு இடம்பெயரும் நிலை உருவாகி உள்ளது.

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளான சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் பாரம்பரியமாக நெசவுத் தொழில் நடைபெற்று வருகிறது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட சேலைகள் தற்போது விசைத்தறி மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு, சென்னிமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சேலைகள் நெய்யப்பட்டாலும் சக்கம்பட்டி சேலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் இது இன்று வரை பலராலும் விரும்பப்படுகிறது. சேலைகள் பெரும்பாலும் கூட்டு முயற்சியாலே உருவாக்கப்படுகிறது.

பாவு எனப்படும் சேலைக்கான பிரம்மாண்ட அச்சில் சுற்றப்பட்ட நூற்கள், நூலிழைகளை அச்சில் கோர்த்தல் (பண் ஏற்றுதல்), சாயம் ஏற்றுதல் என்று பலகட்ட முயற்சியிலே சேலைகள் முழுவடிவம் பெறுகின்றன. இதில் நெய்வுசட்டங்களில் நூலிழை ஏற்றித்தருவதற்கென்று தனி தொழிலாளர்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நூறுக்கு மேற்பட்டோர் இருந்தனர். எதிரெதிரே இரண்டு பேர் அமர்ந்து 3 மணிநேரத்தில் இப்பணியை முடிப்பர். இதில் கோர்க்கப்பட்ட நூலினை தறியில் ஏற்றி பின்பு நெய்வுப் பணி துவங்கும்.

தற்போது நூலிழைகளை கோர்க்க தனி இயந்திரம் வந்துள்ளது. சிறிய வண்டியில் இவற்றை ஏற்றி வீடுகளின் முன்பு நிறுத்தி ஒரு மணி நேரத்தில் முடித்துத் தருகின்றனர். இதனால் இத்தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு வெகுவாய் குறைந்துவிட்டது.

பாரம்பரியமாக இத்தொழிலில் இருந்து வந்த இவர்கள் தற்போது மாற்று வழி இன்றி பரிதவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளி ஈஸ்வரன் கூறுகையில், "பண் ஏற்றுதல் எனும் பிரேம்செட்டில் நூல்கோற்றுத் தரும் பணியில் தற்போது இயந்திரம் வந்துவிட்டது. இதனால் எங்கள் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இயந்திரம் என்பதால் அதில் பல நேரம் தவறு ஏற்பட்டு நெய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மின்சாரம் இல்லாவிட்டாலும் இயந்திரம் பயன்படாது. நூல்கோர்க்க கூர்மையாக பார்க்க வேண்டியிருப்பதால் பார்வைத்திறனும் குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பு குறைந்ததால் ஓட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்" என்றார்.

அரசு மாற்று வேலைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x