Published : 21 Sep 2014 10:47 AM
Last Updated : 21 Sep 2014 10:47 AM

பஸ் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்: உயர் நீதிமன்ற கமிட்டி விரைவில் அறிக்கை தாக்கல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து கருத்துகளைப் பெற்றுள்ள கமிட்டி, பரிந்துரை அறிக்கையை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிச் செல்வதை பரவலாக பல பகுதி களிலும் பார்க்கிறோம். காலை, மாலை நேரங்களில் சீரான இடை வெளியில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அதனால் தொங்கிச் செல்ல வேண்டியுள்ளது என்று மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். பேருந்தில் இடம் இருந்தாலும் மாணவர்கள் உள்ளே வருவதில்லை. தொங்கியபடியே பயணிக்கின்றனர் என்பது போக்குவரத்து நிர்வாகம் கூறும் விளக்கம். முடிவில்லாத பரஸ்பர குற்றச்சாட்டுகள் இவை.

பெருங்குடி விபத்து

இதற்கிடையில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை பெருங்குடியில் நடந்த விபத்து, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி, பள்ளி மாணவர்கள் சென்றனர். அவர்கள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. பஸ் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கான புதிய பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கவும் ஒரு கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டது. கமிட்டி தலைவராக முன்னாள் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், உறுப்பினர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.வி.எஸ்.மூர்த்தி நியமிக்கப்பட்டனர்.

கருத்துக்கேட்பு நிறைவு

பள்ளி, கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்து போலீஸார் உட்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து ஆலோசனைகள், கருத்துகளை இந்த கமிட்டி கேட்டுப் பெற்றது. பல கட்டங்களாக நடந்துவந்த கருத்துகேட்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல தரப்பினரின் கருத்துகளையும் தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் கமிட்டி விரைவில் தாக்கல் செய்கிறது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸிடம் கேட்டபோது, ‘‘பஸ் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான வழக்கு இது. குறிப்பாக, பயணிகளுக்கு சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்கி சேவை வழங்குவது, பஸ்களை நல்ல முறையில் பராமரிப்பது, கதவுகள் பொருத்தப்பட்ட பஸ்களை தொடர்ந்து நன்கு பராமரிப்பது, கதவுகள் இல்லாத பஸ்களுக்கு படிப்படியாக கதவுகள் பொருத்துவது ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளோம். கமிட்டி அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில், பயணிகள் பாதுகாப்புக்காக புதிய உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

இதுதொடர்பாக போக்கு வரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள உத்தரவுகளின்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x