Published : 06 Jun 2019 02:10 PM
Last Updated : 06 Jun 2019 02:10 PM
மதுரை நகரில் மகளிருக்கென தல்லாகுளம், மதுரை நகர், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் ஆகிய மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் காவல் ஆய்வாளர், எஸ்ஐகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மகளிர் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதுதவிர ஒவ்வொரு சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்திலும் 4 முதல் 5 மகளிர் காவலர்கள் பணியில் உள்ளனர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார், கணவன், மனைவி, காதல் விவகாரம் போன்ற குடும்பப் பிரச்சினைகள் பற்றி விசாரிக்கவே மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
மேலும், காவல் ஆணையரிடம் பெண்கள் தொடர்பாக நேரடியாக கொடுக்கும் சில புகார்கள் அங்குள்ள மகளிர் பிரிவு உதவி ஆணையர் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், மகளிர் காவலர்களை சிறப்புப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்புவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் தேங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகளிர் பிரிவு உதவி ஆணையராகப் பணிபுரிந்த மல்லிகா, மக்களவை தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதனால், மகளிர் பிரிவுக்கு வரும் புகார்கள் விசாரிக்க முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. புகார் தொடர்பாக மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகத்துக்கு அலைக்கழிக் கப்படுவதாக புகார்தாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மகளிர் போலீஸார் கூறியதாவது:
மதுரை நகரில் செயல்படும் 4 மகளிர் காவல் நிலையங்களுக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இங்குள்ள ஆய்வாளர், எஸ்ஐகள் உட்பட போலீஸாரை சிறப்புக் காவல் பணிக்கு அனுப்புவதால் புகார்கள் தேங்குகின்றன.
சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு வரும் ‘ போக்சோ ’ சட்டப் பிரிவு புகார்கள் பெரும்பாலும் மகளிர் காவல் நிலையங்களுக்கும், மகளிர் பிரிவு உதவி காவல் ஆணையர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. நாங்கள் விசாரித்து அறிக்கை கொடுத்த பிறகே சட்டம்- ஒழுங்கு போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்கின்றனர்.
அண்மைக் காலமாக சிறுமி, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் அதிகரிக்கின்றன. இந்தாண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இப்புகார்களைத் தேக்கமின்றி விசாரிக்க மகளிர் போலீஸாருக்கு சிறப்புப் பணி அதிகமாக ஒதுக்கீடு செய்யக்கூடாது, என்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேவையின் அடிப்படையில் மட்டுமே மகளிர் போலீஸாரை பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறோம். பெண்களுக்கு எதிரான புகார்களின் மீது துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT