Published : 20 Jun 2019 12:00 AM
Last Updated : 20 Jun 2019 12:00 AM

குஜராத்தில் விபத்தில் சிக்கி சென்னையில் தன் வாழ்க்கையை மீட்டெடுத்தவர்; வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வைஷாலி: மகளாக கவனித்துக் கொள்ளும் புகுந்த வீட்டினர்

குஜராத்தில் விபத்தில் சிக்கி சென்னையில் தன் வாழ்க்கையை மீட்டெடுத்த இளம்பெண் வைஷாலிக்குத் திருமணம் இனிதே நடைபெற்றது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் வைஷாலி.

2016-ல் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மர லிஃப்டில் சிக்கி, விபத்தை எதிர்கொண்ட வைஷாலியால் வாயைத் திறக்க முடியாமல் போனது. கண்பார்வையும் பறிபோனது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இதே ஜூன் மாதத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வழிகாட்டுதலால் எதேச்சையாக ‘இந்து தமிழ்' அலுவலகம் வந்தார் வைஷாலி. ஆசிரியரின் உதவியோடு புகழ்பெற்ற முகச்சீரமைப்பு நிபுணர் மருத்துவர் எஸ்.எம்.பாலாஜியை அணுகி வைஷாலியின் நிலை விவரிக்கப்பட்டது.

விபத்து நடந்ததில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக வைஷாலியின் வாய் திறக்கப்படாமலே இருந்ததால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அறவே இல்லாமல் போனது. இதனால் வாய்க்குள் உள்ள மற்ற பகுதிகளில் இருக்கும் திசுக்களை எடுத்து அண்ணப்பகுதியில் உள்ள ஓட்டையை மூட முடியாத நிலை உருவானது. இவை அனைத்தையும் கவனமாக ஆராய்ந்த மருத்துவர் பாலாஜி, அண்ணத்தில் உள்ள ஓட்டையைத் தற்காலிகமாக அடைக்க, அண்ணத்தின் நிறத்திலேயே இருக்கும் அக்ரிலிக் ப்ளேட்டை (Obturator) பொருத்தினார். இதன் மூலம் வைஷாலியின் வாய்ப்பகுதி முழுமையாக சீரானது.

வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த ட்யூப் (Feeding Jejunostomy) மூலம் பழச்சாறு, பால், மோர் உள்ளிட்ட திரவங்களை மட்டுமே வைஷாலி பருகிவந்த நிலை மாறியது. மீண்டு வந்த வைஷாலி சாப்பிடவும் பேசவும் ஆரம்பித்தார். இதுதொடர்பான செய்திகள் ‘இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் இணையத்தில் தொடர்ந்து வெளியானது.

பழச்சாறைப் பருகிக் கொண்டிருந்த வைஷாலி, வயிராறச் சாப்பிடத் தொடங்கினார். வாயை அசைக்கக்கூட முடியாமல் இருந்த வைஷாலி, வாய் திறந்து பேசத் தொடங்கினார். தற்போது உங்கள் அனைவரின் அன்பாலும் ஆசியாலும் வைஷாலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. சொந்தபந்தங்கள் சூழ வைஷாலிக்கும் வினோத் குமார் என்ற இளைஞருக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் சமீபத்தில் இந்தத் திருமணம் நடந்தது.

இதுகுறித்து வைஷாலியின் தாய் சுனிதா பவார் கூறும்போது, ''எங்களின் 80 சதவீதப் பொறுப்பு நிறைவடைந்துவிட்டது. திருமண வாழ்க்கையை வைஷாலி எப்படி வாழ்கிறாள் என்பதில் மீதி 20 சதவீதம் இருக்கிறது. மாநிலம் கடந்து, மொழி கடந்து அவளுக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் எங்களின் நன்றி'' என்று நெகிழ்கிறார்.

சரியான முடிவு

சென்னையில் வைஷாலி குடும்பத்தினர் குஜராத்தி மண்டலில் தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்து கொடுத்த நரேந்திரா இது சரியான முடிவு என்று பாராட்டுகிறார். இதுகுறித்து நரேந்திரா, இந்து தமிழிடம் கூறும்போது, ‘‘அந்தந்த வயதில் நடக்க வேண்டியது வைஷாலிக்கும் நடந்திருக்கிறது. அவரது பெற்றோர் சரியான முடிவையே எடுத்திருக்கின்றனர். வைஷாலிக்குக் கண் பார்வை இல்லாதது தெரிந்தும் புகுந்த வீட்டில் அவளை மகளாய் கவனித்துக் கொள்கின்றனர். இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x