Last Updated : 03 Jun, 2019 12:00 AM

 

Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM

குடிநீர், பாசனத்துக்கான நீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு; 910 கி.மீ. நீள தமிழ்நாடு நீர்வழிச் சாலை திட்டம்: கடல்மட்டத்தில் இருந்து 230 மீட்டர் உயரத்தில் அமையும்

கடல் மட்டத்தில் இருந்து 230 மீட்டர் உயரத்தில் 17 ஆறுகளின் குறுக்கே 910 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலூர் முதல் செங்கோட்டை வரை சமவெளிக் கால்வாய் அமைப்பதன் மூலம் தமிழகத்தில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களும் தவிக்கின்றன. குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் நிரந்தரத் தீர்வு கிடைத்தபாடில்லை. மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, கடல்நீரைக் குடிநீராக்குவதுமே தற்போதைய தீர்வாக உள்ளது.

இந்நிலையில், கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதே தனது முதல் பணி என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்புக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நதிகளை இணைத்தாலும், மேல்நிலையில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கீழ்நிலையில் உள்ள மாநிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் போகலாம். அதுபோன்ற நேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை போல உருவாகலாம். எனவே, தேசிய நெடுஞ்சாலை போல தேசிய நீர்வழிச் சாலைதான் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்கிறார் மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தாமிரபரணி, பாலாறு, காவிரி, வைகை போன்ற நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

வெள்ளநீரைத் தேக்கி வைக்க முடியாததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்தல், பாசன பாதிப்பால் வறட்சி நிவாரணம் வழங்குதல், மின் பற்றாக்குறை, அதல பாதாளத்துக்கு செல்லும் நிலத்தடி நீர் போன்றவற்றால் மேற்கண்ட இழப்பு ஏற்படுகிறது. நீர்வழிச் சாலை திட்டத்தால் இந்த இழப்பை தவிர்ப்பதுடன், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஆண்டுமுழுவதும் தேவையான தண்ணீர், புனல் மின் உற்பத்தி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். வறட்சி, வெள்ளப்பெருக்கு, சுற்றுச்சூழல் மாசு, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை ஏற்படாது.

மின் தொகுப்பு (பவர் கிரிட்) போல, நீர்வழிச் சாலை என்பது (வாட்டர் கிரிட்)ஆகும். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து, தாமிரபரணியில் பல ஆண்டுகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோலகுற்றாலம் மற்றும் இதர அருவிகளில் இருந்துவரும் தண்ணீர் பாசனத்துக்கு போக மீதம் கடலில் போய் கலக்கிறது. இந்த பருவமழைக் காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி, அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் மேட்டூர் அணை நிரம்பி, காவிரி ஆற்றிலும், கொள்ளிடத்திலும் விநாடிக்கு லட்சம் கனஅடி வீதம் திறந்துவிடப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

பாலாறு, வைகை போன்ற நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இதேநிலைதான். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சராசரியாக 177 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாக ஆய்வு கூறுகிறது. இந்த வெள்ளநீரை நீர்வழிச் சாலைத் திட்டத்தின் மூலம் தேக்கிவைத்தால், தேவைப்படும் இடங்களுக்கு தேவையான அளவு நீரைஎடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மத்திய அரசு திட்டத்தின்படி, கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரிநதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, கிருஷ்ணா நீர் பாலாறு (வேலூர்) வந்துசேரும்.

அதற்கு முன்னதாக, தமிழகத்தில் ஓடும் நதிகளை நீர்வழிச் சாலை மூலம் இணைத்துவிட்டால், தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்கிவிடலாம்.

இத்திட்டத்தின்படி, வேலூரில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை (செங்கோட்டை) ஆகிய மாவட்டங்கள் வழியே 910 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்மட்டத்தில் இருந்து சுமார் 230 மீட்டர் உயரத்தில் ஒரே மட்டத்தில் நீர்வழிச் சாலை (சமவெளிக் கால்வாய்) அமைக்கப்படும். இது வளைந்தும், நெளிந்தும் பரமபதம் போல காணப்படும். இக்கால்வாய், தரைக்கு அடியில் 45 அடி ஆழமும், தரைக்கு மேலே 30 அடி ஆழமும் ஆக மொத்தம் 75 அடி ஆழம் கொண்டதாக இருக்கும். எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதற்கேற்ப கால்வாயின் அகலத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இந்த நீர்வழிச் சாலை, பாலாறு, செய்யாறு, பொன்னையாறு, மணிமுக்தா ஆறு, காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, வைகை, குண்டாறு, அர்ஜுனா ஆறு, வைப்பாறு, சிற்றாறு உட்பட 17 நதிகளின் குறுக்கே அமைக்கப்படும். அதாவது வேலூர், செங்கம், சாத்தனூர், சங்கராபுரம், மேட்டூர், கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சிவகாசி, வில்லிபுத்தூர், கடையநல்லூர், செங்கோட்டை வழியாகச் செல்லும். பிற்காலத்தில் தேசிய நீர்வழிச் சாலை அமைக்கப்படும்போது இந்த நீர்வழிச் சாலை செங்கோட்டையைத் தாண்டி கேரளாவுக்குச் செல்லும்.

தமிழ்நாடு நீர்வழிச் சாலையில் வெள்ளநீரைத் தேக்குவதற்காக அதன் அருகே மேற்கண்ட 17 ஆறுகளின் குறுக்கே கல்லணை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். எந்த நதியில் வெள்ளம் வருகிறதோ அப்போது அந்த தண்ணீர் நீர்வழிச் சாலையில் தேக்கி வைக்கப்படும். நீர்வழிச் சாலை ஒரே மட்டமாக இருப்பதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்த தண்ணீரை நீர்வழிச் சாலை வழியே வைகை, காவிரிக்குதிருப்ப முடியும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த நீரை பாலாறு, அமராவதி என எந்த ஆறுகளுக்கும் திருப்ப முடியும். வளைந்து, நெளிந்து பாம்புபோல 910 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் தமிழ்நாடு நீர்வழிச் சாலையில் 100டிஎம்சி-க்கு மேல் வெள்ளநீரை சேமிக்க முடியும். ஆறுகளின் குறுக்கே உரிய இடத்தில் கல்லணை போன்ற அமைப்பை ஏற்படுத்தி வெள்ளநீரை எளிதாக நீர்வழிச் சாலைக்கு கொண்டு போக முடியும் என்பதால் தண்ணீரை பம்ப் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

கல்லணை போன்ற அமைப்பை உருவாக்குவதற்கு நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், நீர்வழிச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். நீர்வழிச் சாலை மூலம் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்பதால்விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வருவார்கள். அத்துடன் அவர்களிடம் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை விலையில் இழப்பீடு வழங்கவும் இத்திட்டப் பலன்கள் விவசாயிகளுக்கும் கிடைப்பதற்காக இத்திட்டப்பங்குகளை விற்க ஏற்பாடு செய்யப்படும். உதாரணத்துக்கு, 5 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயியிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், மீதமுள்ள 4 ஏக்கருக்கு ஆண்டுமுழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருக்காது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 25 மாவட்டங்களுக்கு ஆண்டு முழுவதும் குடிநீரும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும். 1 கோடியே 50 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு, நீ்ர்வழிப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். இத்திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ரூ.500 கோடி செலவாகும். இதில், 90 சதவீதம் தொகையை மத்திய அரசு வழங்கும். புனல் மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினால், செலவே இல்லாமல் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு ஏ.சி.காமராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x