Last Updated : 22 Jun, 2019 01:01 PM

 

Published : 22 Jun 2019 01:01 PM
Last Updated : 22 Jun 2019 01:01 PM

ஜிப்மர் தரவரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்: நீக்கக்கோரும் பெற்றோர் நலச்சங்கம்

ஜிப்மர் தரவரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளதால் அவர்களை நீக்குமாறு பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

2019-2020 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மாணவர்களின் சேர்க்கைக்கான ஜிப்மர் வளாகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை பட்டியலில் புதுச்சேரியை சேராத மாணவர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் வாய்மொழியாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கும் கருத்துக்களை புதுச்சேரி மண்ணின் மைந்தராக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த 2015-16, 2017-18 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியை சாராத குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியிலும் இருப்பிட சான்றிதழ் பெற்று 10-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களை குறுக்கு வழியில் பறித்துச் சென்றனர். தற்போதும் அவர்கள் படித்து வருகின்றனர்.

ஆகையால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜிப்மர் நிர்வாகம் எம்பிபிஎஸ் முதல் கலந்தாய்வுக்கு புதுச்சேரியில் குடியுரிமை, இருப்பிட சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவைகளை பெற்றோருடன், கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.

மேலும் தற்போது புதுச்சேரி மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியல் மத்திய அரசு நிறுவனமான சிபிஎஸ்இ ஆல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெறாத வெளி மாநில மாணவர்கள் ஜிப்மர் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதும், சந்தேகத்தை அளிக்கிறது. கடந்த காலங்களில் ஜிப்மர் இவ்வாறு முறைகேடாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களின் 55 இடங்களில் குறுக்கு வழியில் சில தவறான நபர்களின் உதவியோடு தட்டிப்பறித்துள்ளது. இதை இந்த ஆண்டு அனுமதிக்க கூடாது.

ஆகையால் கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பு திருத்தியமைக்கப்பட்ட புதுச்சேரி மாணவர்கள் மட்டும் இடம் பெறும் வகையிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும். அதன்பின்னரே முதற்கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கெனவே புகார்களையும் அனுப்பியுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x