Published : 19 Jun 2019 04:16 PM
Last Updated : 19 Jun 2019 04:16 PM
சேலம் மாநகராட்சிக்கு வைப்புத் தொகை செலுத்தாததை அடுத்து, சேலத்தில் பிரபலமான திரையரங்கு ஒன்றுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 22 சினிமா திரையரங்குகள் மாநகராட்சிக்கான வைப்புத் தொகையை 3 ஆண்டுகளாக செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நகரின் முக்கிய திரையரங்குக்கு சீல் வைத்தனர். மற்ற திரையரங்குகள் மீதும் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழகத்தில் அதிக சினிமா திரையங்குகளைக் கொண்ட நகரம் என்ற பெருமை சேலத்துக்கு மட்டுமே உண்டு. எனினும், கால மாற்றத்தால் சேலம் நகரின் பெரும்பாலான திரையங்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. எஞ்சியிருப்பவை 25 திரையரங்குகள் மட்டுமே.
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி, உரிமக் கட்டணம் ஆகியவற்றை வசூலிப்பதற்கான அனுமதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலத்தில் உள்ள 25 திரையரங்குகளும் உரிமத்துக்கான வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. எனினும், திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை வைப்புத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்தனர். மாநகராட்சி நிர்வாகம் அடுத்தடுத்து, 4 முறை நோட்டீஸ் வழங்கியும் திரையரங்கு உரிமையாளர்கள் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இறுதி வாய்ப்பாக, 5-வது முறையும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 திரையரங்கு உரிமையாளர்கள் வைப்புத் தொகையை செலுத்தினர். மற்ற திரையரங்குகள் டெபாசிட் தொகையைச் செலுத்தவில்லை.
எனவே தொகையை செலுத்தாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் (வருவாய்) கே.ராஜா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படும் பிரபலமான தியேட்டர் ஒன்றுக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''திரையரங்கு உரிமையாளர்களுக்கு 4 முறை நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் வைப்புத் தொகையை செலுத்தவில்லை. இறுதி வாய்ப்பாக, 5-வது முறையும் நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வைப்புத் தொகையை செலுத்த முன்வரவில்லை. எனவே, வைப்புத் தொகையை செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். ரூ.25 லட்சம் வைப்புத் தொகை செலுத்தாத தியேட்டருக்கு தற்போது சீல் வைத்துள்ளோம். அடுத்தடுத்த திரையரங்குகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கைத் தொடரும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT