Published : 19 Jun 2019 08:00 AM
Last Updated : 19 Jun 2019 08:00 AM
தமிழகத்தில் ஆண்டுக்கு இருமுறை மா விளைச்சல் கிடைக்கும் பகுதிகளில் உடுமலைப்பேட்டையும் ஒன்றாகத் திகழ்ந்த வரலாறு மாறி, மழையின்மை, பூச்சித் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்ததுடன், உரிய விலையும் கிடைக்காததால் `மா’ சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில், தளி, ஜல்லிப்பட்டி, மானுப்பட்டி, திருமூர்த்தி மலை, பொன்னா லம்மன்சோலை, ஆத்தூர், ருத்திரா பாளையம், குமரலிங்கம், கொழுமம் உட்பட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சாகுபடி நிலங்களால் ஆண்டு முழுவதும் மாம்பழ உற்பத்திக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. இதனால், இப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை விளைச்சல் கிடைத்து வந்தது.
தென்னையை போன்ற குறைந்த பராமரிப்பு காரணமாகமேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் தேர்வாக மா சாகுபடி அமைந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின்மை, நோய்த் தாக்குதல் காரணமாக பலரும் மா சாகுபடியை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் கட்டுப்படியான விலையும் இல்லை, எதிர்பார்த்த விளைச்சலும் இல்லாததால் விவசாயிகள் காய்களைப் பறிக்காமல், மரத்திலேயே விட்டுவிட்டனர். அவை, அணில், வவ்வால் மற்றும் பறவைகளின் உணவாக மாறிவிட்டது.
இதுகுறித்து மா சாகுபடி விவசாயி ஆர்.கோபால்கூறும்போது, “மானாவாரிப் பயிரான மா விவசாயத்துக்கு,குறைந்த அளவு நீரும், அதற்கேற்பதட்பவெப்ப நிலையும் அவசியம். அவை இரண்டையும் உடுமலை விவசாயிகளுக்கு, இயற்கை வழங்கியுள்ளது. அதனால், பாரம்பரியமாக ஆண்டுக்கு இருபோக விளைச்சல் கிடைத்தது. நவீன வேளாண்மையின் வரவால் சுமார் 1,500 ரகங்களில் மா நாற்றுகள் உள்ளன.
பாரம்பரிய ரகங்கள் முற்றிலும் இல்லை. பெரும் பாலானவை ஒட்டுரகம்தான். அதில் 40 முதல் 50 வகையான ரகங்களையே உடுமலைப் பகுதி விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரத்துஅதிகரிப்பால், நிலையான விலையும் கிடைப்ப தில்லை. காட்டு பன்றிகள், காட்டுயானைகளின் தொல்லையும்அதிகமாக உள்ளது. அதனால் ஆண்டு தோறும் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மாவுப்பூச்சி தாக்குதல் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். குளிர் பதனக் கிடங்கு அமைக்க வேண்டும், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆழ்குழாய் அமைத்து சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இது தொடர்பாக பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் புகார் தெரிவித்தும்கூட, எவ்விதப் பலனும் இல்லை. இந்த ஆண்டு மா விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.
குறைந்தபட்சம் 400 முதல் 500 கிராம்எடையுள்ள காய்களையே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், 50 கிராம்,100 கிராம் எடையளவில் மட்டுமேகாய்கள் விளைந்ததால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் விட்டுவிட்டனர். நிலத்தைப்பராமரிக்க குறைந்தபட்சமாக ஏக்கருக்கு ரூ.30,000 செலவு செய்ய வேண்டியுள்ளது.
மா சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், தங்களின் குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, விவசாயக் கடன், நகைக் கடன் ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, தமிழக அரசு மா சாகுபடி விவசாயிகளின் நிலையை ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். இதற்கிடையில், உடுமலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட விவசாயிகள்அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், அவற்றை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறும் போது, “உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் விளையும் மாம்பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, திண்டுக்கல் சந்தைக்கு அனுப்பி வைக்கிறோம். உடுமலை பகுதியில் குமரலிங்கம், ருத்திராபாளையம் பகுதியில்தான் ஓரளவு விளைச்சல் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் இருந்து 500 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முன்பு இதே பகுதியில் 2,000 டன் வரை கொள்முதல்செய்துள்ளோம். சரியான விளைச்சலும் இல்லை. கிலோ ரூ.12 என்ற விலையில்தான் கொள்முதல் செய்யப் படுகிறது. ஆக, ஒரு டன் விலை ரூ.12,000. இதுவரை இல்லாத அளவுக்கு மா சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்” என்றனர்.
ஆண்டுக்கு 7,500 டன் விளைச்சல்...
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “உடுமலை வட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் சுமார் 400 ஏக்கரும் மா சாகுபடி நடைபெறுகிறது. காளப்பாடி, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், பெங்களூரா, கிளிமூக்கு என பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஏக்கருக்கு 5 முதல் 6 டன் என்ற அளவில், ஆண்டுக்கு 7,500 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சாதகமான தட்பவெப்ப நிலையால் தமிழகத்தில், கன்னியாகுமரிக்கு அடுத்து ஆண்டுக்கு இருமுறை விளைச்சல் கிடைப்பதில் உடுமலை சிறந்து விளங்கி வருகிறது. சராசரியான மழை, அதே அளவு வெப்பம் இதற்கு ஏற்ற சூழல் ஆகும். பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசன் தொடங்குகிறது. உடுமலைப் பகுதி விவசாயிகள் சீசன் இல்லாத சமயங்களில் அறுவடை செய்வதால், நல்ல விலை கிடைக்கிறது. பெரும்பாலான சாகுபடி நிலங்கள் வன எல்லைகளை ஒட்டியே உள்ளன. அதனால் வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு, வனத் துறை மூலம் இழப்பீடு அளிக்கப்படுகிறது. தற்போது பூச்சித் தாக்குதல், மழையின்மையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். உயரதிகாரிகளின் வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT