Last Updated : 07 Jun, 2019 05:20 PM

 

Published : 07 Jun 2019 05:20 PM
Last Updated : 07 Jun 2019 05:20 PM

உச்ச நீதிமன்ற தடை சூழலில் புதுச்சேரியில் கூடிய அமைச்சரவைக் கூட்டம்: இலவச அரிசி தொடரும் என முடிவு

நிதி சார்ந்த முடிவுகளை புதுச்சேரி அமைச்சரவை வரும் 21-ம் தேதி வரை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள சூழலில் இன்று கூடிய புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் இலவச அரிசி திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது உட்பட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையில் பதவியேற்ற நாள்முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கிரண்பேடி செயல்பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார். அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநருக்குத் தலையிடும் அதிகாரமில்லை என்றும் மத்திய அரசு பிறப்பித்த இரு உத்தரவுகளை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 7-ம் தேதி வருவதால் நிதி சார்ந்த முடிவுகளை ஆளுநரின் முடிவில்லாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கிரண்பேடியின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

இதையடுத்து நிதி சார்ந்த முடிவுகளை புதுச்சேரி அமைச்சரவை வரும் 21-ம் தேதி வரை அமல்படுத்த உச்ச நீதிமன்றம்  தடை விதித்தது. அத்துடன் உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கப்படவில்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,  தலைமை ச்செயலர் அஸ்வினி குமார் உள்ளிட்ட பல்வேறு துறைச் செயலர்கள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"ஆதிதிராவிட நலத்துறையை ஆதிதிராவிட மற்றும் பழங்குயின நலத்துறை என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடிவு எடுத்தோம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 

லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை தொடர்பானதில் நிதி சார்ந்து உள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தத் தடை உள்ளது. அதனால் தீர்ப்புக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x