Published : 04 Jun 2019 04:17 PM
Last Updated : 04 Jun 2019 04:17 PM

கணவனை இழந்த ஏழைப் பெண்ணின் குடும்பத்துக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த இளைஞர்கள்

வேலூரில் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்ட கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கழிப்பறை கட்டிக்கொடுத்தனர்.

ஐடி வேலை, கை நிறைய சம்பளம் கிடைத்தாலும் சமூகப் பொறுப்பு மிக்க இளைஞர்கள் வரிசையில் வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரவணன் (30) இடம் பெற்றுள்ளார். தன்னைப்போல் இந்த சமூகத்தையும் உயர்த்த வேண்டும் என்ற கனவுகளுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் உதவியால் டாக்டர் அப்துல் கலாம் மாணவர் முன்னேற்ற சேவா சங்கத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சென்னையில் வேலை என்றாலும் வாரத்தின் இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து வேலூரில் வீடு, வீடாகச் சென்று மரக்கன்று கொடுப்பது, பனைமரம் நடுவது, வறுமையில் இருக்கும் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கே சென்று அரிசி வழங்குவது, சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு, துணிகளை வழங்குவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது என்று பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் வேலூர் அலமேலுரங்காபுரத்தில் உள்ள சில வீடுகளுக்கு அரிசி வழங்கச் சென்றபோது கணவனை இழந்த சித்ரா என்ற பெண் தனது மகன், மகளுடன் கழிப்பறை இல்லாமல் அவதிப்படுவதை தினேஷ் கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் தெரிந்துகொண்டனர்.

வீடுகளுக்குச் சென்று பாத்திரங்களை கழுவி பிழைப்பு நடத்தி வந்த சித்ராவுக்கு மாத வருமானமே ரூ.1,000 தான் கிடைக்கிறது. அந்த சொற்பத் தொகையில் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வரும் அவரால் வயதுக்கு வந்த மகளுக்காக கழிப்பறை கட்டிக்கொடுக்க முடியாமல் கண் கலங்கியுள்ளார்.

சித்ராவுக்கு இருந்த மிகப்பெரிய கவலை இப்போது தீர்ந்திருக்கிறது. தனது மகள் பாதுகாப்புடன் இருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

 "சித்ராவின் இயலாமையை நினைத்து எங்களுக்குள் பெரிய வருத்தம் இருந்தது. 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் சித்ராவின் வீட்டில் கழிப்பறை கட்டிக்கொடுக்க அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்தோம். கடைசியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அரசாங்கத்தின் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் நாங்களே கழிப்பறையை கட்டிக்கொடுக்க முடிவு செய்தோம்.

வழக்கம்போல் எங்கள் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டினர். ரூ.37,825 தொகையில் சித்ராவின் வீட்டுக்கு கழிப்பறை, குளியலறையைக் கட்டிக் கொடுத்துள்ளோம். இனி சித்ராவும் அவரது மகளும் கவலையடையத் தேவையில்லை" என்றார், தினேஷ் சரவணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x