Published : 01 Jun 2019 04:44 PM
Last Updated : 01 Jun 2019 04:44 PM

புதிய கல்வி கொள்கையை மொழிபெயர்த்து வெளியிடுக; கருத்து தெரிவிக்க 3 மாத அவகாசம் தேவை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

புதிய கல்வி கொள்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க 3 மாத அவகாசம் தேவை எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி 2016-ம் ஆண்டு டி.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைத்ததிலும் பல குளறுபடிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பிறகு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப் பட்டது.

 

அந்த குழு, தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம்  ஒப்படைத்துள்ளது.

 

புதிய வரைவில் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநிலத் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் நமது இருமொழிக்கொள்கைக்கு பாதிப்பு வராமல் தேசிய கல்விக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

 

மேலும் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வித்துறை பொறுத்தமட்டில்

Level1: முன்பருவக்கல்வி முதல்  2 -ம் வகுப்பு வரை

Level 2: 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு

Level 3: 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை

Level 4: 9-ம் வகுப்பு முதல்  12-ம் வகுப்பு வரை

9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பருவத்தேர்வு (செமஸ்டர்) முறை, ஆண்டுக்கு 2 தேர்வுகள் அறிமுகம் என்பது வரவேற்புக்குரியது.

 

இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கில மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட அந்தந்த தாய்மொழியில் வரைவு அறிக்கை இருந்தால் மட்டுமே முழுமைபெறும் என்பதால்,  இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும். அப்போதுதான் புதிய கல்விக் கொள்கைக்கான இலக்கினை அடைய முடியும்.

 

வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்தினைப் பதிவு செய்திட ஜூன் 30-ம் தேதியே கடைசி என்பதை மறுபரிசீலனை செய்து மொழிபெயர்ப்பு வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x