Published : 07 Jun 2019 12:00 AM
Last Updated : 07 Jun 2019 12:00 AM
அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மாநிலம் முழுவதும்400 பேர் வரை விதிகளை மீறிபணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகளை தொடங்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் கடந்தகல்வி ஆண்டில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
ஆசிரியர்கள் பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் வகுப்புகள் நடைபெறுவது தடைபட்டு அங்கன்வாடிகளில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகளே நடைபெற்றன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் விசாரணையின் முடிவில் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் மழலையர் வகுப்புகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஜூன் 3-ம் தேதி பணியில் சேர தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மழலையர் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடிமையங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மாவட்ட கல்வி அதிகாரிகள் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் என்பதே பெரும்தவறு. பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. அரசு வழிகாட்டுதலில் ஒரு ஒன்றியத்துக்குள் உள்ள அங்கன்வாடிகளுக்கு செல்வதற்கு உபரி ஆசிரியர் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் கடைநிலையில் இருப்பவர்தான் செல்ல வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லும்போது அந்த ஒன்றியத்தில் இளையவர் செல்ல வேண்டும். ஆனால், அரசின் விதிகளுக்குமாறாக இளையவர்களைத் தவிர்த்து பணியில் அதிகம் அனுபவம் கொண்டுள்ள 400 ஆசிரியர்கள் வரை அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் காலிப்பணியிடம் அதிகமுள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மாற்றப்படவில்லை. மாவட்டகல்வி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
ஏற்கெனவே ஆசிரியர்கள் மனஉளைச்சலில் இருக்கும் சூழலில், கல்வித் துறை அதிகாரிகளின் இத்தகைய தவறான நடவடிக்கை ஏற்புடையதல்ல. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் ஏ.கருப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘இது தவறான தகவல். விதிகளின்படியே இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆசிரியர்கள்சிலருக்கு விருப்பமில்லை. சமூகநலத் துறையின்கீழ் சென்றுவிட்டதாகவும், தங்களை பணியிறக்கம்செய்வதாகவும் கருதுகின்றனர். இதனால் அதற்கு தடங்கல் உருவாக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்தல் போன்ற செயல்பாடுகளை செய்துவருகின்றனர். அதேநேரம் இடமாற்ற செய்வதால் ஆசிரியர்களின்எந்தச் சலுகையும் பறிக்கப்படாது.
எனவே, பயமின்றி ஆசிரியர்கள்தங்கள் பணியை தொடரலாம்’’என்றார். அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்பு திட்டம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT