Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால், நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி, சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதுடன், மின்மோட்டார்கள் மூலம் தென்பெண்ணை ஆற்று நீரை ஏரிகளில் நிறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்கள் 52 ஆயிரத்து 963 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளைப் பொறுத்தவரை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 89 ஏரிகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில், 1160 ஏரிகளும் உள்ளன. கடந்த ஆண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால், 90 சதவீதம் ஏரிகள் வறண்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 57 ஆயிரத்து 459 கிணறுகளில், 70 சதவீத கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன.
கடந்த மாதம் பெய்த மழையினால், தென்பெண்ணை ஆற்றில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் செல்கிறது. ஆனால் இம்மாவட்டத்தில் உள்ள பாம்பாறு, சின்னாறு, மார்கண்டேய நதி ஆகியவை தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கின்றன.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, தளி, சூளகிரி ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் குடிநீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு டிராக்டர் குடிநீரை ரூ.750 கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஆழ்குழாய் கிணறுகளில் 1500 அடிக்கு கீழ் தண்ணீர் சென்றுவிட்டதால், ஒரு குடம் தண்ணீர் எடுக்க குறைந்தது 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதே போல் மழையின்றி விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கோடை மழை குறைந்ததால் மானாவாரி பயிர்களான துவரை, நிலக்கடலை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக மாவட்டத்தில் 81 கிமீ தூரம் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் 5 இடங்களில 200 அடிக்கு அணை கட்டி தண்ணீர் தேக்கி வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம். இதே போல், மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு சேர்க்க முடியும். ஆனால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்காமல், தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கும் நிலை தான் காணப்படுகிறது.
எனவே, தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டியும், மின்மோட்டர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT