Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM

மழைநீர் சேகரிப்பு அமைப்பு மீண்டும் கட்டாயமாக்கப்படுமா?- காற்றில் பறந்த ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே கட்டிடஅனுமதி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு தற்போதுதீவிரமாக அமல்படுத்தப்படாததால், வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

நிலத்தில் பெய்யும் மழையில் 40 சதவீதம் கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாவதாகவும், 14 சதவீதம் நிலத்தால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவுவதாகவும் கணக்கிடப்படுகிறது. ஆனால், தற்போது கிராமங்கள்முதல் நகரங்கள் வரை வீடுகள்,கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுவதாலும், திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார்ச்சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், பெய்யும் மழை நீரில் 5 சதவீதம்கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2001-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, ‘நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை’ சட்டத்தைக் கொண்டு வந்தது. வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில், கட்டிட அனுமதி பெறும்போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாத கட்டிடங்களுடைய மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பின்னர் 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுகஅரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் 2011-ல்பொறுப்பேற்ற அதிமுக அரசு, இந்த திட்டத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை. மக்களும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாமலேயே கட்டிடம் கட்டுகின்றனர். அவ்வாறு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் பயனடைந்துள்ளதை தற்போது பெருமையாகக் கூறுகின்றனர்.

கடும் குடிநீர் தட்டுப்பாடு

தொலைநோக்குடன் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர்சேகரிப்பு திட்டம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. அதனால், தற்போது சென்னை மட்டுமின்றி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் வாரத்துக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு குடம் குடிநீரை 8 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பல இடங்களில் 1,000 அடிக்கு கீழே சென்றுவிட்டதால் மதுரை அண்ணா நகர், கே.கே.நகர், டிஆர்ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கிபயன்படுத்துகின்றனர். அதேநேரம் தனிப்பட்ட ஆர்வத்தில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்தவர்கள், குடிநீர் தட்டுப்பாடின்றி உள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு அமைப்புஇருந்தால்தான் கட்டிட அனுமதிஎன்ற திட்டத்தை உள்ளாட்சிஅமைப்புகள் கட்டாயமாக செயல்படுத்தியிருந்தால் இன்று குடிநீர் பிரச்சினை பெருமளவு குறைந்திருக்கும்.

கண்காணிப்பில் தொய்வு

இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பான அரசு ஆணைநடைமுறையில்தான் உள்ளது. கட்டிட அனுமதி வரைபடத்தில் ஏதாவது ஓரிடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பதாகக் காட்டுகின்றனர். ஆனால், அரசுஇந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தாததாலும், கண்காணிப்பு மற்றும்ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாலும் பெரும்பாலானோர் முறைப்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டுவதில்லை" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x