Published : 07 Sep 2014 01:02 PM
Last Updated : 07 Sep 2014 01:02 PM

அரசு டீத்தூள் தரமில்லை என மக்கள் புகார்: ரேஷனில் விற்க முடியாமல் பணியாளர்கள் திணறல்

ரேஷன் கடைகளில் விற்கப்படும் ஊட்டி டீத்தூளில் தரமில்லை என பொதுமக்கள் வாக்குவாதம் செய்வதால் அவற்றை விற்க முடி யாமல் கடை விற்பனையாளர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முழுநேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் அனைத்திலும் அத்தியாவசியப் பொருட்களுடன் உப்பு, மைதா, ரவை, சோப்பு, டீத்தூள், தீப்பெட்டி உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கடைகளில் சர்க்கரை, பருப்பு, கோதுமை ஆகிய பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் இதர பொருட்களில் ஏதாவது ஒன்றிரண்டு வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இதுபோன்ற பொருட்களை விற்றே ஆக வேண்டும் என்று கடை விற்பனையாளர்களுக்கு கட்டாய நிலை. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப் படும் பெரும்பாலான இதர பொருட் கள் தரமற்றதாக இருப்பதாகக் கூறி பொதுமக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினைகள் உரு வாகும்போது, ‘குடும்ப அட்டை தாரர்களை வற்புறுத்தி எந்த பொருளையும் விற்கக் கூடாது’ என்று அதிகாரிகள் மற்றும் அமைச் சர் தரப்பில் இருந்து ஆறுதல் அறிக்கை வெளியிடப்படும்.

விற்பனையாளர்களுக்கு நெருக்கடி

அதேநேரம் விற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியும் விற்பனையாளர்களுக்கு தொடரும். எனவே ரேஷன் பொருள் வாங்க வருபவர்களிடம் சண்டையிட்டாவது இதர பொருட் களை விற்பனையாளர்கள் விற்கின்றனர். இதில் ரவை, மைதா, தீப்பெட்டி, ஷாம்பு உள்ளிட்டவை தனியார் நிறுவன தயாரிப்புகள். ஆனால் டீத்தூள், குன்னூரில் உள்ள அரசு நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற பொருட்களைகூட வாங்கிக் கொள்ளும் பொதுமக்கள் டீத்தூளை மட்டும் வாங்க முன்வருவதில்லை.

இதுதொடர்பாக குடும்ப அட்டைதாரர்கள் கூறும்போது, ‘ரேஷன் கடைகளில் ஒரு பாக்கெட் டீத்தூள் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இந்த டீத்தூள் அரசு நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுவது, தரம் நிறைந்தது, இயற்கையானது, விலையும் குறைவு என விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த டீத்தூளில் தரம் கிடையாது. ரவை உள்ளிட்ட இதர பொருட்களையாவது ஓரளவு பயன்படுத்த முடிகிறது. ஊட்டி டீத்தூளை பயன்படுத்தவே முடிவதில்லை.

உணவுப் பொருட்களில் தரமின்மை நிலவினால் அரசுதான் அதைக் கண்டறிந்து தடை செய்ய வேண்டும். ஆனால், அரசு மூலம் செயல்படுத்தப் படும் ஒரு நிறுவனமே இவ்வளவு தரம் குறைந்த ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பது வேதனை.

ஊட்டி டீத்தூளில் தரம் இருந்தால் ஒன்றுக்கு இரண்டாக வாங்கிச் செல்ல பொதுமக்கள் தயாராக உள்ளனர். சற்றே விலை உயர்த்தப்பட்டாலும்கூட தரமான தூளாக விற்பனை செய்யப்பட்டால் எதிர்ப்பு இருக்காது. எதிர்காலத்திலாவது தரமான டீத்தூளை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, ‘ஊட்டி டீத்தூளில் தரம் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். இருப்பினும் விற்றே தீர வேண் டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறோம். பொதுமக்கள், அதி காரிகள் என இரு தரப்பினரிடமும் சிக்கி சிரமப்படுவது நாங்கள்தான். டீத்தூளின் தரம் குறித்து அரசு பரிசீலனை செய்தால் நல்லது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x