Last Updated : 23 Jun, 2019 05:01 PM

 

Published : 23 Jun 2019 05:01 PM
Last Updated : 23 Jun 2019 05:01 PM

கடல்வளமே எம் வளம்: இழுவை மடி, சுருக்கு மடியைத் துறந்து கட்டுப்பாடுடன் மீன்பிடிக்கும் தருவைக்குளம் மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமம் தருவைக்குளம். இங்குள்ள மீனவர்கள் தனிச்சிறப்பானவர்கள். அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள். காரணம், இவர்களுக்கு கடல்வளத்தைப் பேணுவதன் அவசியம் தெரிந்திருக்கிறது. மனிதனின் சுயநலத்தால் காலநிலை மாறி கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தருவைக்குளம் மீனவர்களோ நான், எனது குடும்பம், எங்களுக்கான சொத்து என்றெல்லாம் சுயநலமாக இல்லாமல் கடல் வளத்தை இப்படித்தான்; இவ்வளவுதான் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதலுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுயநலமிகள் சூழ் இவ்வுலகில், பாராட்டுக்குரிய தருவைக்குளம் மீனவர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக தருவைக்குளம் மீனவர்களிடமும், அனைவருக்கும் மீன் - ஆராய்சி மற்றும் பயிற்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் வேல்விழியிடமும் பேட்டி கண்டோம்.

தருவைக்குளம் மீனவர் சிலுவை பேசியதாவது:

''எங்கள் ஊரில் எல்லோருமே ஊர்க் கட்டுப்பாட்டுக்கு இணங்கிதான் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். யாரும் இழுவை மடி, சுருக்கு மடியைப் பயன்படுத்துவதே இல்லை. கில் நெட் (Gill Net) எனப்படும் செவுல் வலையை மட்டுமே பயன்படுத்துகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக இப்படித்தான் மீன் பிடித்து வருகிறோம். நான் இங்கு நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர். இதேபோல் பெரிய விசைப்படகுகள் வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மாலை மூன்று மணிக்குப் பின்னர்தான் கடலுக்குச் செல்வார்கள். நாங்கள் அதிகாலை முதல் 3 மணி வரை கடலுக்குச் செல்வோம். இந்தக் கட்டுப்பாட்டினை ஒருநாளும் நாங்கள் மீறுவதில்லை. அப்படியே யாரேனும் விலகிச் செல்ல முயன்றாலும் ஊர்ப் பெரியவர்களின் கண்டிப்புக்கு உள்ளாக நேரிடும்.

சந்தையிலிருந்து வரும் தேவை எவ்வளவாக இருந்தாலும் அந்த நெருக்கடிகளுக்காக நாங்கள் மீன் வளத்தை துஷ்பிரயோகம் செய்வதில்லை. ஒருநாளைக்கு கடல் வளத்தை இப்படித்தான்; இவ்வளவுதான் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புரிதலுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த முறையை நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம். 2004 சுனாமிக்குப் பின்னரே கடல் வளத்தில் நாங்கள் கண்கூடாக பல்வேறு மாற்றங்களைப் பார்க்கிறோம். கடல் வெப்பம் அதிகரித்திருப்பதை எங்களால் கடலுக்குச் செல்லும்போது உணர முடிகிறது. முன்பெல்லாம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கச்சாங் காற்று வீசும். அது வரும் வழியில் மீன்களை அப்படியே சுழற்றி இழுத்துக் கொண்டு வரும். ஆனால், சமீபகாலமாக கச்சாங் காற்றே இல்லை. இதனால் மீன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பார்த்த மீன்களை இப்போதெல்லாம் காண முடிவதே இல்லை. முரள், வாவல், நெத்திலி, விலை மீன் போன்ற வழக்கமான மீன்கள் மட்டும்தான் வலையில் சிக்குகின்றன.

புவி வெப்பமடைதலால் மழை குறைந்திருப்பதும் கடல் வளம் குன்ற முக்கியக் காரணம் என நாங்கள் உணர்கிறோம். மழை இல்லாததால் இங்குள்ள குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன. முன்பு எங்கள் ஊரில் புதிய குளம், பழைய குளம் என இரண்டு குளங்கள் இருக்கும். மழை பெய்யும் காலங்களில் இந்தக் குளங்களில் இருந்து தண்ணீர் கடலில் கலக்கும். கடல் நீரில் இப்படி நன்னீர் கலப்பதும் அவசியம். ஆனால், இப்போதெல்லாம் அரசாங்கம் இதைத் தடுக்கின்றது. எங்கு நீர் ஆதாரம் இருந்தாலும் அது மக்கள் பயன்பாட்டுக்கு என தேக்கி வைத்துவிடுகிறது. குறைந்தது 40 நாட்களாவது கடலில் நன்னீர் கலந்தால் மட்டுமே கடலில் மீன்வளம் பெருகும்.

கடல்வளம் பெருக வேண்டுமானால் வளத்தைப் புரிதலுடன் கையாள வேண்டும். பவளப்பாறைகள் கடல்வளத்தைப் பாதுகாக்க அவசியமானது என்பதை தருவைக்குளம் மீனவர்களாகிய நாங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறோம். அதனால்தான் பவளப்பாறைகளைச் சிதைக்கும் மீன்பிடி முறைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை. இந்தக் கடல் மாதா எங்களுக்குக் கொடுக்கும் வளம் எங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். சந்ததி சந்ததியாகக் கிடைக்க வேண்டும் என்றால் கடல்வளமே நம் வளம் என்ற பொதுநலம் வேண்டும்'' என்றார்.

மீனவர்களின் அனுபவ அறிவு பாரம்பரிய அறிவு முன் நம்மால் சவால் விட்டு நிற்க முடியாது. வாடைக் காற்று, கோடைக் காற்று, கச்சாங் காற்று என 8 விதமான காற்றை வைத்தே எங்கே எப்போது எந்த வகையான மீன் கிடைக்கும் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் சொல்லிவிடுகின்றனர். ஆனால், காலநிலை மாற்றத்தால் இந்தக் காற்று வகைகளில் பல இப்போது வீசுவதே இல்லை என்பது கடலோடிகளுக்கான துயரம் மட்டுமல்ல நமக்கான எச்சரிக்கையும்கூட.

அனைவருக்கும் மீன் - ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் வேல்விழியுடனான நேர்காணல்...

தருவைக்குளம் மீனவர்களின் மீன்பிடி முறைக்கு உங்கள் மையத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டதா?

இல்லை. இது தருவைக்குளம் சமுதாய மக்களின் சொந்த முடிவு. அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த முறையைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவகையில் இவர்களின் இந்தக் கட்டுப்பாடுதான் எங்களை இவர்களுடன் கொண்டுவந்து இணைத்தது. தருவைக்குளத்தை நான் ஒரு முன்மாதிரி மீனவ கிராமம் என்றே சொல்வேன். கடல்வளத்தை இப்படி அணுகுவதன் விழிப்புணர்வு மன்னார் வளைகுடா மீனவர்கள் அனைவருக்குமே ஏற்பட வேண்டும். காலநிலை மாற்றம், முறையற்ற மீன்பிடி பழக்கவழக்கங்களால் கடல்வளம் பெருமளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் தருவைக்குளம் மீனவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

தருவைக்குளம் கிராமத்தில் நீங்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்சி மையத்துடன் (MSSRF) இணைந்து கடல் மிதவைப் பந்து (Wave Rider Buoy) நிறுவியுள்ளீர்கள்? இதன் பயன்பாடு பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்..

கடல் மிதவைப் பந்து (Wave Rider Buoy) என்பது கடல் அலையின் உயரம், கடல் காற்றின் வேகம் ஆகியன பற்றி மீனவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் கருவி. இந்தக் கருவியை கடலில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து நாங்கள் நிறுவியுள்ளோம். கான்க்ரீட் நங்கூரம் போட்டு இதனை நிலை நிறுத்தியிருக்கிறோம். தருவைக்குளத்தில் கரை நிலையம் (Shore Station) நிறுவியுள்ளோம். இங்கிருந்து HF எனப்படும் ஹை ஃப்ரீகுவன்சி மூலம் பெறப்படும் தகவல்களை மீனவர்களுக்குத் தெரிவிக்கிறோம். இந்தத் தகவல்கள் எஃப்.டி.பி. மூலம் இன்காய்ஸ் (INCOIS- Indian National Centre for Ocean Information Services)-க்கு அனுப்பி விடுகிறோம்.

இன்சாட் செயற்கைக்கோளும் நேரடியாக இன்காய்ஸ் (INCOIS)-க்கு இத்தகவல்களை அனுப்புகிறது. வேவ் ரைடர் போயும் அனுப்புகிறது. ஒருவேளை செயற்கைக்கோள் தகவல் பெற இயலாவிட்டால் கடல் மிதவைப் பந்து மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது இன்னும் துல்லியமாக அந்தந்த கடற்பகுதியின் நிலவரத்தை மீனவர்களுக்குத் தெரிவிக்கிறது.

இதுதவிர தருவைக்குளம் கரை நிலையம் வாயிலாக மீனவர்களுக்கு வளங்குன்றா மீன்பிடி முறைகள் பற்றியும் அரசாங்கத்தின் மீனவர்களுக்கான திட்டம் குறித்தும் அவ்வப்போது விளக்குகிறோம்.

இங்குள்ள மீனவர்களிடம் பேசியபோது Fisher Friendly Mobile Application பற்றி கூறினார்கள்.. அதைப் பற்றி விவரித்துக் கூறுங்களேன்..

Fisher Friendly Mobile Application, இது மீனவர்களுக்கான பிரத்யேக செயலி. இது அவர்களுக்கு எந்தெந்த இடத்தில் மீன்பாடு இருக்கும், கடலில் காற்று வேகம், அலை உயரம் எப்படி இருக்கிறது, நீரோட்டம் எப்படி இருக்கிறது, மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை என்ன?, சர்வதேச கடல் எல்லை போன்ற பல்வேறு விவரங்களையும் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் முன் இந்த அப்ளிகேஷனைப் பார்த்துச் செல்வது தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த அப்ளிகேஷனை தயாரித்தது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்சி மையம் (MSSRF). இதற்கான நிதி உதவியை குவால்காம் மையம் (Qualcomm) செய்தது. தகவல்களை இன்காய்ஸில் இருந்து பெறுகிறோம். இது போக 24 மணி நேரம் செயல்படும் ஹெல்ப்லைன் எண்களும் இருக்கின்றன. 9381442311, 9381442312 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மீனவர்கள் எந்நேரமும் தகவல் பெற முடிகிறது. மீனவர்களை தொலைபேசி எண்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கு ஒரு நிமிட அளவில் அறிவுரை (Audio Advisory) வழங்குகிறோம்.

கடலை கடலோடிகள்தான் காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடலை மற்றவர்களும் ஏன், எதற்காக, எப்படி பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என்பதன் நிமித்தம் உங்கள் அறிவுரை / ஆலோசனை என்ன?

கடல் என்பது மீனவர்களுக்கு வாழ்வாதாரம். ஆனால், நமக்கு அது விவசாய நிலங்களைப் போல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இடம். மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமானதாக கடல் உணவு இருக்கிறது. அதனால், விவசாய நிலங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது கடல் வளத்தைப் பாதுகாப்பது. கடலைப் பாதுகாப்பது கடலோடிகளின் கடமை மட்டுமல்ல. நமது கடமையும்கூட.

கடலை எப்படிப் பாதுகாக்கலாம் என்று கேட்டால், "இப்போது எல்லாக் கழிவு நீரும் சேரும் இடம் கடலாகத்தான் இருக்கிறது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கலக்கின்றன.  இது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துகிறது. கடற்கரையை அசுத்தப்படுத்துவதும் நடக்கிறது.

கடல்தான் உயிரினம் தோன்றிய இடம். கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. கடலில் சுற்றுலா செல்லலாம் என்ற அளவில்தான் கடல் மீதான ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. கடல் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தளமாக இருக்கிறது. அது வெப்பத்தை உள்வாங்கும் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமானால் கடலை நாம் குப்பைத் தொட்டியாக்காமல் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வுதான் மக்களுக்கு இப்போது மிக அவசியமாகத் தேவைப்படுகிறது" என்பேன்.

இவ்வாறு விஞ்ஞானி வேல்விழி கூறினார்.

யூதப் பழமொழி ஒன்று இருக்கிறது. நான் எனக்காக வாழவில்லை என்றால் வேறு யார் எனக்கான வாழ்க்கையை வாழக்கூடும்; ஆனால் நான் எனக்காக மட்டுமே வாழ்வேனேயானால் நான் என்ன மனிதனா? அல்ல அறிவற்ற ஜீவனா? என்று பொருள்படும் வகையில் அந்தப் பழமொழி அமைந்திருக்கும்.

இது சுற்றுச்சூழலை பேணுவதில் மனிதர்கள் நம் அனைவருக்கும் பொருந்தும். இந்த பூமி நமக்காக, இங்குள்ள வளங்கள் எல்லாம் நமக்காக, இங்கு விளையும் பொருட்கள் நமக்காக, கடல் வளம், நிலத்தில் கிடப்பவை, நிலத்திற்கு கீழே கிடைப்பவை என எல்லாம் நமக்காக என்ற எண்ணம் மட்டும்தான் மனிதர்களாகிய நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. அதனால்தான் அவற்றைக் கூட்டாக துஷ்பிரயோகம் (Mass Exploitation) செய்கிறோம். மனிதர்கள் இல்லாவிட்டால் இந்த மண்ணும், கடலும், ஆகாயமும் அதன்வழியிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆனால் இவற்றின் வளங்களை சுரண்டலைத் தாண்டியும் நாம் சேதப்படுத்தினால் நம்மால் இருக்க இயலாது. மலையும், வனமும், கடலும், நிலமும், நிலத்தடி வளமும், காற்றும் இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. இது எளிமையான உண்மை மட்டுமல்ல ஆழமான உண்மையும்கூட.

நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

- பாரதி ஆனந்த்

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x