Published : 11 Jun 2019 05:56 PM
Last Updated : 11 Jun 2019 05:56 PM
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.
*
இதில் மதுரை நெடுஞ்சாலைக் கொலையில் பலியான குடும்பத்தலைவரின் மகன் படிக்க உதவி தேவைப்படுவதாக செய்தி வெளியாகி இருந்தது. அதில் உயிரிழந்த பாஸ்கரின் மகன் முகேஷ் கண்ணா கல்லூரி செல்ல பணம் தேவைப்பட்டது குறித்து சொல்லப்பட்டது.
இச்செய்தியைப் படித்த 'இந்து தமிழ்' வாசகர் ராமலிங்கம் முகேஷ் கண்ணாவுக்குத் தேவைப்பட்ட ரூ.46 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார். அத்துடன் முகேஷ் கண்ணாவின் மூன்றாண்டு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதுதவிர 'இந்து தமிழ்' வாசகர்கள் முகேஷ் கண்ணாவுக்கு ஏராளமான பொருளாதார உதவி செய்துள்ளனர். செய்தி வெளியான நாளில் இருந்து இதுவரை 2 லட்சத்துக்கு 95 ஆயிரத்து 772 ரூபாய் கிடைத்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் கண்ணா, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அவரின் வருங்காலத் தேவைகளுக்கும் கணிசமாக தொகை சேர்ந்திருக்கிறது.
இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார் முகேஷ் கண்ணாவின் தாய் ஸ்ரீதேவி. ''எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க. அவர் இல்லாத அதிர்ச்சியில் இருந்து வெளியே வர்றதுக்குள்ள மகனுக்கு ஃபீஸ் கட்ட வேண்டிய நிலை. நீங்க எல்லோரும் சேர்ந்து உதவி பண்ணிட்டீங்க. ரொம்ப நன்றிங்க'' என்கிறார்.
சகோதரி மகனுக்குத் தேவையான உதவி கிடைத்தது குறித்துப் பேசிய பிரியா, ''செய்தி வெளியானதுல இருந்து என்னால போனை எடுத்துப் பேச முடியலை. அவ்வளவு வாசகர்கள் உதவி பண்ணாங்க. எல்லாத்துக்கும் மேல, ராமலிங்கம் சார், முகேஷோட படிப்பு செலவுகளை ஏத்துக்கறதா சொல்லிட்டார். இதுக்கு மேல வேறென்ன வேணும்?'' என்று கண் கலங்குகிறார்.
இதுதொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய ராமலிங்கம், ''மதுரை எனக்கும் எனது இரு சகோதரர்களுக்கும் பள்ளி, கல்லூரிக் கல்வி வழங்கிய மாநகரம். அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவன் நான். சர்வதேச மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி இந்தியாவுக்குத் திரும்பி, தற்போது மியூச்சுவல் பஃண்ட் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன்.
என்னுடைய தாய், தந்தை இருவரும் பிறருக்கு உதவி செய்வதை விருப்பத்தோடு செய் என்று ஊக்கப்படுத்துவார்கள். அவர்கள் இருவருக்கும் தற்போது 80 வயது ஆகிறது. முகேஷ் கண்ணாவுக்கு உதவியதில் அவர்கள்தான் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்'' என்றார் ராமலிங்கம்.
இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் பெருமை கொள்கிறது. முகேஷ் கண்ணாவுக்குத் தேவையான உதவிகள் கிடைத்துவிட்டன. இனி தேவை உள்ள பிறருக்கு வாசகர்கள் உதவலாம்.
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT