Published : 06 Jun 2019 12:58 PM
Last Updated : 06 Jun 2019 12:58 PM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து மீண்டும் போராடத் தயாராகும் படி காங்கிரஸாருக்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனும் மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வெங்கடசுப்பா ரெட்டியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கிரண்பேடி, புதுச்சேரி மாநிலத்துக்கு பெரும் சாபக்கேடு.அவரை எதிர்த்து மீண்டும் போராட காங்கிரஸார் தயாராக வேண்டும். காங்கிரஸாரின் பலத்தினாலேயே அவரை எதிர்த்து வருகின்றேன்.
தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT