Published : 03 Jun 2019 05:17 PM
Last Updated : 03 Jun 2019 05:17 PM
ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு முதன்முதலாக கல்வி பயில வந்த மாணவ, மாணவியருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது டி.சுப்புலாபுரம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்பு இன்று (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப்பள்ளியைப் பொறுத்தளவில் இந்த ஆண்டு புதியதாக 40 குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். முதல்முறையாக கல்வி பயில பெற்றோரிடம் இருந்து பள்ளிச்சூழலுக்கு வரும் இவர்களை உற்சாகப்படுத்தி, கவுரவிக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக பள்ளி வந்த குழந்தைகள் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு மேளதாளம் முழங்க பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுடன் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த 80 மாணவ, மாணவியருக்கும் மாலையுடன் அவர்களுடன் ஊர்வலமாக வந்தனர். பெற்றோரும் இவர்களுடன் ஆர்வமாக நடந்து வந்தனர். இந்த ஊர்வலம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் வந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை மாலை அணிவித்து மேளதாளம் முழங்க உற்சாகமாக அழைத்துச் செல்வதை கிராம மக்கள் ஆர்வமுடன் ரசித்தனர். தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் ஊர்வலம் தொடர்ந்தது.
பின்பு மேல்நிலைப்பள்ளிக்கு இதர மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சந்தனம், குங்குமம் வைத்து மாணவ, மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரவர் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கிடைத்த இந்த வரவேற்பு பொதுமக்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பின்பு மேல்நிலைப்பள்ளியில் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்யும் கணினி கைரேகை வருகைப் பதிவேடும் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மகேஷ், ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
இது குறித்து தலைமையாசிரியர் மகேஷ் கூறுகையில், "இப்பகுதியில் உள்ளவர்கள் பலரும் நெசவாளர்கள். தங்கள் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இங்கு தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் இக்குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT