Published : 20 Jun 2019 04:23 PM
Last Updated : 20 Jun 2019 04:23 PM
ஆண்டிபட்டியில் குப்பைகளை நேரடியாக சேகரிக்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குப்பைத் தொட்டிகளே தேவைப்படாத பேரூராட்சியாக ஆண்டிபட்டி மாறி உள்ளது. குப்பைக் குவியல், துர்நாற்றம் போன்ற நிலை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சியின் 18 வார்டுகளில் மொத்தம் 9 ஆயிரத்து 452 வீடுகள் உள்ளன. சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தினமும் 5.5 டன் மக்கும் குப்பைகளும், மறுசுழற்சி குப்பை 1.77 டன்னும் இதர கழிவுகள் 1.4 டன்னும் என ஒருநாளைக்கு மொத்தம் 8.67 டன் குப்பைகள் உருவாகின்றன.
இவ்வளவு குப்பைகளையும் சேகரிக்க ஆண்டிபட்டியில் ஒரு குப்பைத் தொட்டி கூட இல்லை. அவ்வளவும் வீட்டில் இருந்து நேரடியாக குப்பைக் கிடங்குக்கு வந்து சேர்கிறது. இதற்காக பேரூராட்சி சுகாதாரப்பிரிவு சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள 57 குப்பை வண்டிகள் காலை முதலே வார்டுகளின் பல பகுதிகளுக்குச் செல்லும்.
ஏற்கெனவே வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை வைக்க வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளியில் கொட்டக்கூடாது என்று பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் துப்புரவுப் பணியாளர்களின் விசில் சப்தம் கேட்டதும் பொதுமக்கள் குப்பைகளை அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இவ்வாறு 18 வார்டுகளும் முழுமைப்படுத்தப்படுகின்றன.
கடைகள், வங்கிகள், அலுவலகங்கள் 10 மணிக்குத்தான் திறக்கப்படும் என்பதால் இதற்கு தனி வணிகக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியாளர்கள் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை கடைவீதிகளுக்குச் சென்று குப்பைகளைப் பெற்று வருவர்.
ஆண்டிபட்டியைப் பொறுத்த அளவில் முக்கிய வீதிகள் தொடர் போக்குவரத்துடன் இருப்பதால் பகலில் இவற்றை தூய்மை செய்ய முடியாது என்பதால் இரவுகளில் இப்பகுதிகளில் தூய்மைப்பணி நடைபெறுகிறது. இதற்காக ஒரு டிராக்டர் அவர்களுடன் இரவு முழுவதும் உடன் செல்கிறது.இந்தக் குப்பைகள் அனைத்தும் எடை போடப்பட்டு மக்கும், மக்காத, இதர குப்பைகள் என்று தனித்தனியே பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கும், மண்புழு உரம் தயாரிக்கவும் வகைப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் கூறுகையில், "ஆண்டிபட்டி பேரூராட்சி மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முன்மாதிரியாக விளங்கி வருகிறது. குப்பைகளைத் தொட்டிகளில் கொட்டி அள்ளினால் நிரம்பி வழியும். துர்நாற்றம் வீசும். காற்றினால் பிற இடங்களுக்கு பரவும்.
இதுபோன்ற காரணங்களை பொதுமக்களிடம் விளக்கி வீட்டிலேயே இவற்றைப் பெற்று வருகிறோம். இதனால் ஆண்டிபட்டியில் குப்பைத் தொட்டிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்காக எங்களைப் பாராட்டியுள்ளது. விரைவில் இவற்றை கணினிமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு துப்புரவு வண்டியிலும், தொழிலாளிக்கும் ஜிபிஎஸ் கருவி கொடுக்கப்பட்டு அவர்கள் எந்தப் பகுதிகளில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் வீடுகளில் க்யூ.ஆர். கோடு (QR code) கொடுத்து அவற்றை ஸ்கேன் செய்வதின் மூலம் குப்பைகள் பெறப்பட்டதையும் கணினி மூலம் கண்காணிக்க முடியும்" என்றார்.
குப்பைகளை வீதிகளில் உள்ள தொட்டிகளிலும், திறந்தவெளியிலும் கொட்டி வருபவர்களுக்கு மத்தியில் ஆண்டிபட்டி மக்களின் குப்பை அகற்றும் நேர்த்தி பலரிடையே பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT