Published : 02 Sep 2014 09:00 AM
Last Updated : 02 Sep 2014 09:00 AM
திமுக-வில் தலைவர் கருணாநிதியின் முகநூல் மற்றும் பொருளாளர் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இணையதளம், முகநூல், டிவிட்டர் ஆகியவை நிமிடத்துக்கு நிமிடம் ‘அப்-டேட்’ செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கவனிப்பாரின்றி ஒரு மாதமாக நீக்கப்பட்ட நிர்வாகியின் பெயரைக்கூட எடுக்காமல் உள்ளது.
சமீப காலமாக தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளத்தை தங்கள் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துகின்றன. இதில் மற்ற கட்சிகளைவிட முன்னணியில் உள்ளது திமுக. திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பெயரில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை இயக்குகிறார். அதில் ‘லேட்டஸ்ட் நியூஸ்’ என்று கட்சி செய்திகள் அப்-டேட் செய்யப்பட்டு ‘ஸ்ரோலிங்’காக ஓடுகின்றன. கூடவே, அதில் ‘என்னை முகநூலில் பின்தொடருங்கள்’, ‘நீங்கள் டிவிட்டரிலும் என்னைத் தொடரலாம்’ என்று ஸ்டாலின் அழைக்கிறார். கட்சி கூட்டங்களில் ஸ்டாலின் அடிமட்ட தொண்டர்களின் தோளில் கைபோட்டுகொண்டு நிற்கும் படங்களும், அவரது சொற்பொழிவுகளும் பதிவிடப்படுகின்றன. ஸ்டாலினின் முகநூல், நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’களை அள்ளுகிறது. ஸ்டாலின் தவிர, ஸ்டாலினின் நண்பர்கள் வட்டாரம், உறவினர் வட்டாரங்கள் தனித்தனியாக ஸ்டாலினுக்கு ஆதரவாக முகநூல் பக்கங்களையும் டிவிட்டர் பக்கங்களையும் இயக்கி வருகின்றனர்.
2 லட்சம் லைக்குகள்
இதேபோல் கட்சித் தலைவர் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ முகநூலும் மும்முரமாக இயங்குகிறது. கருணாநிதியின் அன்றாட அறிக்கைகளை மறுநாள் வரை காத்திருக்காமல் அவ்வப்போது முகநூலிலேயே தெரிந்துகொள்ள முடிகிறது. பெரும் சாதனையாக நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்குகளை அள்ளுகிறார் கருணாநிதி.
இப்படி சமூக வலைதளங்களில் மும்முரமாக இருக்கும் நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டும் கவனிக்க ஆளில்லாமல் உள்ளது. திமுக-வின் இரண்டு அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்த பெ.வீ.கல்யாணசுந்தரம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அவர் எழுதிய ஒரு கடிதம் காரணமாக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சட்டத்துறை செயலாளராக இருந்த ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டு ஒரு மாதம் நெருங்கியும்கூட கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT