Published : 08 Jun 2019 10:42 AM
Last Updated : 08 Jun 2019 10:42 AM
கஜா புயலால் வீழ்ந்த தோட்டக்கலைப்பயிர்களை மீண்டும் உருவாக்கம் செய்வதற்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாகரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மற்றும் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் பல்வகை பூக்கள், காய்கறிகள், பழ மரங்களை சாகுபடி செய்துள்ளனர்.
‘கஜா’ புயலால் சமீபத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, அரியலூர், கடலூர், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தோட்டக்கலைப்பயிர்கள் பெரும் சேதமடைந்தன.
புதுக்கோட்டையில் அதிகப்பட்சமான சேதம் ஏற்பட்டதாக கஜா புயல் சேதம் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்கு தகுந்தார்போல் ‘கஜா’ புயல் ஈழப்பீடு தொகையை தோட்டக்கலைத்துறை, அவர்கள் வங்கி கணக்கில் ஒப்படைத்தது.
இதில், நிரந்தரப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும், நீர் பாசன வசதியுள்ள பயிர்களுக்கு ரூ.13 ஆயிரமும், இதர மானாவாரி பயிர்களுக்கு ரூ.8 ஆயிரமும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. ‘கஜா’ புயலால் பெரியளவில் தோட்டக்கலைப்பயிர்கள் அழிவை சந்தித்ததால் அதன் சாகுபடி பரப்பு தற்போது குறைந்துள்ளது.
அதனால், இந்த பயிர்களை மீண்டும் உருவாக்க செய்து சாகுபடி பரப்பை அதிகரிக்க தற்போதுபுதிய திட்டத்தை தோட்டக்கலைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
விவசாயிகள், பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் ‘கஜா’ புயலால் வீழ்ந்த தோட்டக்கலைப்பயிர்களை மீண்டும் சாகுபடி செய்தால் அவர்களுக்கு அதற்கான செலவை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் காலங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரணநிதியில்(STRF) விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.
இந்த நிவாரணநிதியில் இருந்துதான் சேதமடைந்த தோட்டக்கலைப்பயிர்களுக்கு ரூ.20 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 280 ஹேக்டேர் தோட்டக்கலைபயிர்களுக்குஇழப்பீடு வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு கொடுத்துவிட்டதால் உடனே அந்த இடத்தில் விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்து மீண்டும் உருவாக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லை.
அவர்கள் அந்த பயிர்களை சாகுபடி செய்ய வாங்கிய கடனைத்தான் அடைப்பார்கள். அதனால், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டதோட்டக்கலைப்பயிர்களை மீண்டும் உருவாக்கம் செய்வதற்கு, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை மறுஉருவாக்கம் செய்வதற்கு வாழைக்கு ஹேக்டேருக்கு ரூ.26,250, பப்பாளிக்கு ரூ.22,500,மாமரத்துக்கு ரூ.6,000, எலுமிச்சைக்கு ரூ.13,000, கொய்யாவுக்கு ரூ.9,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகையையும் விவசாயிகள் வங்கி கணக்கில் தோட்டக்கலைத்துறையில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு, விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை மீண்டும் அந்த நிலத்தில்பயிரிட வேண்டும். அதற்கான ஆதாரங்களை புகைப்படத்துடன் இணைத்து அந்தந்த பகுதி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்களிடம் வழங்கினால் உடனே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக தற்போது ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகப்பட்சமாக ‘கஜா’ புயலால் அதிகம்பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.11 கோடியும், அடுத்து திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.4 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.90 லட்சமும், மதுரை மாவட்டத்திற்கு ரூ.82 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
அதனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் அந்த பயிர்களை தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்தால் இந்த ஊக்கத்தொகையை பெறலாம்.
இந்த ஊக்கத்தொகை தவிர, தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணுயிர் பாசனம் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நீடித்த நிலையான மானாவாரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களிலும் மானிய உதவிகள் வழங்கப்படும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT