Published : 10 Sep 2014 11:33 AM
Last Updated : 10 Sep 2014 11:33 AM
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் ஏழைகளுக்கு ஒரு பிடி அரிசி வழங்கும் ரைஸ் பக்கெட் சேலஞ்சை ஹைதராபத்தில் வசிக்கும் மஞ்சு லதா கலாநிதி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக முகநூலிலும் பதிவு செய்யப்பட்ட பக்கம், இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதை முன்மாதிரியாகக் கொண்டு, ஏழை மக்களுக்கு ஆடை வழங்க முடிவு செய்த கோவை மண்டல ஊர்க்காவல் படையினர், நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா வனப்பகுதி யிலுள்ள கல்லம்பாளையம், மேலூர், கீழூர் கிராமங்களில் வசிக்கும் 700 பழங்குடியினருக்கு ஆடைகள் வழங்கினர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் பி.பாலாஜி கூறியது:
முகநூலால் பிரபலமான ரைஸ் பக்கெட் சேலஞ்சை ஆதரித்த 200 ஊர்க்காவல்படையினர், 500 கிலோ அரிசியை மன வளர்ச்சி குன்றியவர்கள், கவுண்டம்பாளையம் கருணை இல்லம் மற்றும் சுங்கத்தில் உள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு வழங்கினர். தற்போது 2-வது அத்தியாவசிய தேவையான ஆடைகளை வழங்கி வருகிறோம் என்றார்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஊர்க்காவல் படை கமாண்டன்ட் எம்.சுதாகர் கூறுகையில், பிறருக்கு சேவை செய்ய ஊர்க்காவல் படையினர் உந்துதலாக இருக்கின்றனர். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகாத பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். இதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.
ஆடைகளை பெற்றுக் கொண்ட மேலூரைச் சேர்ந்த புல்லா என்பவர் கூறுகையில், அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிப்பதால் விலங்குகளை பார்க்கும் எங்களுக்கு, மனிதர்களை காண்பது அரிது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT