Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM
மதுரை அருகே அங்கன்வாடி மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பெண் பணியாளர்கள் நியமனத்தால் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்,அவர்கள் இருவரும் பக்கத்து ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தீண்டாமை சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 1,563 காலிப் பணியிடங்களை நிரப்ப 2017 செப்டம்பரில் அப்போதைய ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நேர்முக தேர்வு நடந்தது. ஆனால், தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிடாமல் மாவட்ட நிர்வாகம் 2 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டது.
இந்நிலையில் மதுரை ஆட்சியராக வந்த நாகராஜன், நேர்முகத் தேர்வில் தேர்வான தகுதியானோரின் பட்டியலைத் தயாரித்து, அவர்களுக்கு கடந்த 3-ம் தேதி உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பரிந்துரைகளை ஏற்காமல் அவர்களின் எதிர்ப்பையும் மீறி பணி நியமன ஆணை வழங்கியதால் மறுநாளே ஆட்சியர் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது வரை புதிய ஆட்சியர் நியமிக்கப்படவில்லை.
ஆட்சியர் நாகராஜனின் நடவடிக்கையால் அங்கன்வாடி பணி ஆணை பெற்ற 1,563 பேரில்,மதுரை அருகே வலையபட்டியைச் சேர்ந்த எம்.அன்னலட்சுமி, எம்.ஜோதிலட்சுமி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் தங்களதுசொந்த ஊரான வலையபட்டியிலேயே பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் பயிற்சி முடித்த ஜோதிலட்சுமி அங்கன்வாடி பணியாளராகவும், அன்னலெட்சுமி உதவியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால் எங்கள் குழந்தைகள் படிக்கும் அந்த மையத்தில் அவர்கள் உணவுசமைக்கக் கூடாது, பாடமும் நடத்தக்கூடாது என்று அந்த ஊரின் பெரும்பான்மை சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குழந்தைகளையும் அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும், அவர்களை வேறு கிராமத்துக்கு இடமாற்றம் செய்யும்படி ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் புகார் செய்தனர்.
அதன்பேரில் எம்.ஜோதிலட்சுமி பக்கத்து ஊரானமதிப்பனூருக்கும், அன்னலட்சுமி கிழவனேரிக்கும் கூடுதல் பொறுப்பு என்று கூறி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், அந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பாமல் மீண்டும் தங்களை சொந்த ஊரிலே பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு வேலை கிடைத்தும்..
இதுகுறித்து எம்.ஜோதிலட்சுமி கூறும்போது, ‘‘சாதிரீதியாக எங்களை ஒடுக்குறாங்க. சொந்த ஊரில் அரசுப் பணி கிடைத்தும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியவில்லை. இடமாறுதல் செய்து 10 கி.மீ. தள்ளியுள்ள மதிப்பனூருக்குப் போக சொல்லிட்டாங்க. 2 கி.மீ. நடந்து போய் அந்த ஊருக்கு பஸ்சில் போக வேண்டும். இவங்க கொடுக்கிற சம்பளத்தில் பாதி பஸ்சுக்கே போய்விடும். எங்களை அங்கன்வாடி மையத்தில் பணி நியமனம் செய்த நாளில் இருந்தே ஊரில் ஒரே பிரச்சினை. வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருக்கு. எந்த பயமும் இல்லாமல் பாதுகாப்பாக எங்கள் ஊரிலே மீண்டும் பணிபுரிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
அங்கன்வாடி உதவியாளர் அன்னலட்சுமி கூறும்போது, ‘‘2 பிள்ளைகளை வைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த சிபாரிசும் இல்லாமல் இப்படியொரு வேலை கிடைத்தது ஆறுதலாக இருந்துச்சு. ஆனா, அது சில நாள்கூட நீடிக்கல. நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்பதால் எங்க ஊரில் வேலை பார்க்கக் கூடாதுன்னு அச்சுறுத்துறாங்க’’ என்றார்.
அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்ட சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது அவரால் பணி ஆணை பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 அங்கன்வாடி பெண் பணியாளர்கள் அவர்கள் ஊரில் பணிபுரிய பெரும்பான்மை சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “அங்கன்வாடியில் பணி நியமனம் செய்யப்பட்ட 2 தாழ்த்தப்பட்ட பெண்களை, ஊரார் எதிர்ப்புஎன்று காரணம் கூறி வேறு இடத்துக்கு மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இதற்கு காரணமானோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அந்த 2 பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அச்சத்தோடு, என்ன செய்வது என்று அறியாமல் வேதனையில் உள்ளனர். குடியரசுத் தலைவராக கூட தாழ்த்தப்பட்டவர் வரலாம், ஆனால் சமையல் உதவியாளர் பணிக்கு வரக் கூடாதா? இந்தச் சம்பவம் மீது தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மதிக்காமல், சாதி ஆணவப் போக்கைக் காட்டியவர்களுக்கும் தக்க தண்டனை தேவை” என்று கூறியுள்ளார்.
‘இடமாற்றம் செய்யவில்லை’
ஆட்சியர் (பொ) சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘ஜோதிலட்சுமி, அன்னலட்சுமி இருவரும் தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தவறுதலாக கூறுகின்றனர். அவர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டதாக எந்த ஆணையும் நாங்கள் வழங்கவில்லை. அவர்கள் ஊரில் நிலவும் சாதிப் பிரச்சினையால் அங்கன்வாடி மையத்துக்கு அந்த ஊர் மக்கள் குழந்தைகளை அனுப்பவில்லை. யாரும் வராததால் பக்கத்து ஊரைக் கூடுதல் பொறுப்பாகப் பார்க்க அதிகாரிகள் சொல்லியுள்ளனர். வலையபட்டியில் இவர்கள் பணிபுரிவதற்கு, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது உண்மைதான். அவர்களை அரசு எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்காது. மீண்டும் குழந்தைகள் அங்கன்வாடிக்கு வந்ததும் பணியாளர்கள் அங்கே பணிபுரிய அனுப்பப்படுவார்கள். இவர்கள் பணிக்கு யாரேனும் இடையூறு செய்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT