Published : 20 Jun 2019 05:06 PM
Last Updated : 20 Jun 2019 05:06 PM

அறம் பழகு எதிரொலி: பெற்றோரை இழந்த இரு சிறுவர்கள் பள்ளி செல்ல உதவிய இந்து தமிழ் வாசகர்கள்!

'இந்து தமிழ்' இணையதளத்தில் அறம் பழகு' தொடரில் கரூரில் கோர விபத்தால் தாய், தந்தையை இழந்த இரு சிறுவர்கள் படிக்க உதவ வேண்டும் என்ற செய்தி கடந்த 7-ம் தேதி வெளியானது. அதில் தரணீஷும் கிரிதரனும் பள்ளிக்குச் செல்ல ரூ.15 ஆயிரம் தேவைப்பட்டது குறித்துக் கூறப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியைப் படித்த 'இந்து தமிழ்' வாசகர்கள், இருவருக்கும் தேவையான தொகை ரூ.15 ஆயிரத்தை விட அதிகமாகவே தந்து உதவியுள்ளனர். செய்தி வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 3.5 லட்ச ரூபாய் அளவில் நிதி சேர்ந்துள்ளது. இதன்மூலம் தரணிஷும் கிரிதரனும் உற்சாகத்துடன் பள்ளி செல்லத் தொடங்கிவிட்டனர்.

குடும்ப நண்பர்களான சாதிக் அலியும் ராஜலிங்கமும் சிறுவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1.5 லட்சத்தை தனித்தனியாக டெபாசிட் செய்துள்ளனர்.

இதுகுறித்து சாதிக் அலி பேசும்போது, ''தாயுள்ளம் கொண்டு வாசகர்கள் அளித்த பங்களிப்பு மகத்தானது. துடிப்பில்லாத படகு போலத் தடுமாறிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு 'இந்து தமிழ்' வாசகர்கள் கரம் கொடுத்தனர். அவர்களுக்கும் மனிதாபிமானம் கொண்ட மனிதர்களுக்கும் கோடானுகோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

சிறுவர்களின் பாட்டி பாக்கியம் குரலில் சற்றே ஆறுதலுடன் பேசுகிறார். ''எம்பேரனுங்களுக்கு உதவுனதுக்கு நன்றிங்கம்மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனி அவங்க படிச்சுக்குவாங்க. என்ன, தண்ணி இல்லாம ஆடுகளை வளர்க்க முடியலை. வீட்டுச் செலவுக்கு சிரமமா இருக்கு. யாராவது முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொடுத்தா நல்லா இருக்கும்யா'' என்கிறார்.

இரு சிறுவர்களுக்கும் உதவிய உள்ளங்களுக்குத் தனியாக நன்றி தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கிறார் ராஜலிங்கம். இதுபற்றி மேலும் பேசியவர், ''கரூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முன்வந்தார்.

ஆனால் கட்டணம் கட்டப்பட்டதாகச் சொன்னவுடன், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை 3 மாதங்களுக்குப் பயன்படுத்தும் அளவில் வாங்கித் தந்தார். ஏராளமான முகம் தெரியாத நண்பர்கள் இன்னும் உதவிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்'' என்கிறார்.

இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் பெருமை கொள்கிறது.

தரணிஷுக்கும் கிரிதரனுக்கும் போதுமான உதவிகள் கிடைத்துவிட்டன. இனி தேவை உள்ள பிறருக்கு வாசகர்கள் உதவலாம்.

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x