Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM
போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி, பெருவளநல்லூர் ஆதி திராவிடர் நல பள்ளியில், நிகழாண்டில் ஒரு மாணவர்கூட சேராதது ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பெருவளநல்லூரில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள 2 பழைய கட்டிடங்களும் மிகவும் பழுதடைந்து, பயன்படுத்த இயலாத நிலைக்குச் சென்றுவிட்டதால், கடந்த 2015-16-ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.6.50 லட்சத்தில் புதிதாக ஒரு வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு, அதில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு பணி நீட்டிப்பில் பணி யாற்றி வந்த தலைமையாசிரியர், கடந்த மே மாதத்துடன் பணி ஓய்வு பெற்றுவிட்டதால், மாற்றுப் பணி அடிப்படையில் மேல வாளாடியில் இருந்து வசந்தா, கீழ அன்பிலில் இருந்து கென்னடி ஆகிய 2 ஆசிரியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜூன் 3-ம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில், அந்தப் பள்ளியில் இதுவரை ஒரு மாணவர்கூட சேரவில்லை.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, “இந்தப் பள்ளியில் கடந்தாண்டில் முதல் வகுப்பில் ஒருவர், 5-ம் வகுப்பில் 2 பேர், 6, 7 ஆகிய வகுப்புகளில் தலா 3 பேர் என மொத்தம் 9 பேர் மட்டுமே படித்த நிலையில், அவர்கள் அனைவரும் நிகழாண்டு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சேர்ந்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. இதற்கு ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வராததே முக்கிய காரணம்” என்றனர்.
பள்ளியின் முன்னாள் மாணவி அ.சுதா, முன்னாள் மாணவர் ஆ.முருகானந்தம் ஆகியோர் கூறியது:
பள்ளியில் சேதமடைந்த கட்டி டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால், அவை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. மேற் கூரை ஓடுகள் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளன. மதுபாட்டில்களும், குப்பையும் பரவிக் கிடப்பதுடன், துர்நாற்றமும் வீசுவதால், அங்கு பள்ளிக்கேற்ற சூழல் இல்லை. இந்த கட்டிடங் களுக்கு அருகிலேயே புதிய கட்டிடமும் கட்டப்பட்டிருப்பதால், இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டு கின்றனர். எனவே, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த பழைய கட்டிடங்களை அகற்றி, அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து, மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து நல்ல சூழலை உருவாக்க வேண்டும். தனியார் பள்ளிகளைப் போல, போதிய கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தந்தால் மட்டுமே இப்பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளியை மூடக் கூடாது” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வட்டாரங்களில் கேட்டபோது, அவர்கள் கூறியது:
பெருவளநல்லூர் மட்டுமன்றி புதூர் உத்தமனூர், வி.துறையூர் ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளிலும் நிகழாண்டு இதுவரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. பெருவளநல்லூர் பள்ளிக்கு மாற்றுப் பணிக்குச் சென்றுள்ள 2 ஆசிரியர்களும் கிராம மக்களை சந்தித்து, பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்து வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், கிராம மக்களில் ஒருவர் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
பள்ளியில் மாணவர்கள் சேராதது, பெற்றோர் ஆர்வம் காட்டாதது, ஒன்றிய பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தது என அனைத்து விவரங்கள் தொடர் பாகவும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு ஆசிரியர்க ளிடம் இருந்து அறிக்கை வரப் பெற்றுள்ளது. அதன்பேரில், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஜூன் 17-ம் தேதி(நாளை) பெருவ ளநல்லூர் சென்று ஆய்வு நடத்தவுள் ளார். அந்த ஆய்வறிக்கை ஆதிதிரா விடர் நலத் துறை இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT