Last Updated : 07 Jun, 2019 12:00 AM

 

Published : 07 Jun 2019 12:00 AM
Last Updated : 07 Jun 2019 12:00 AM

50 லட்சம் விவசாயிகளின் கனவை நனவாக்கும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேறுவது எப்போது?

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மத்தியில் புதிய அரசு பதவியேற்று உள்ள நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மன்னர் காலத்திலேயே முயற்சி

காவிரி உபரி நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர். உபரிநீரை தேக்கிட மாயனூரில் கதவணை கட்டவும், கால்வாய் மூலம் வைகை - குண்டாறுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1933-ல்புதுக்கோட்டை நிர்வாகியாக இருந்த டாட்டன்ஹாமின் முயற்சியால் மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணியும் தொடங்கி ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது.

சுதந்திரத்துக்கு பிறகும் முயற்சி

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதுக்கோட்டை எம்.பி. முத்துச்சாமி வல்லத்தரசு இதுகுறித்து 1954, மே 5-ல் நாடாளுமன்றத்தில் பேசினார். 1958-ல் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் காமராஜர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் இத்திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி ரூ.3,290 கோடியில் காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்குகால்வாயும் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கால்வாய் கதவணையில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கு திசையில் செல்லும். அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி தென்மேற்கில் கடைசிவரை சென்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாறில் இணையும்.

திட்டத்தின் பயன்கள்

இத்திட்டம் மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு, கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 ஹெக்டேர் பாசன வசதி பெறும். 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தின் முதற்கட்டமாக 2008 ஜூனில்ரூ.234 கோடியில் மாயனூர் கதவணை அமைக்கப்பட்டு, 2014 ஜூன் 25-ல் திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். அதன்பின் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. கடந்த 2014-ல் கால்வாய் அமைக்க ரூ.5,166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), ஹெச்.ராஜா (பாஜக) தாங்கள் வெற்றி பெற்றால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தனர். தேர்தலில் வென்ற கார்த்தி சிதம்பரம் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ஆதிமூலம் கூறியதாவது: கர்நாடகா கடந்த ஆண்டு ஜூன் முதல் நடப்பாண்டு மே 27 வரை 405 டிஎம்சி தண்ணீரை திறந்துள்ளது. இதில் கடந்த ஆண்டு ஜூலை முதல்ஆகஸ்ட் வரை 130 டிஎம்சி நீர் கடலில் கலந்துள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தென் மாவட்டங்கள் வறட்சியில் இருந்து தப்பித்திருக்கும். தென்மாவட்டங்களின் விவசாயத்தை தக்கவைக்க இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் எஸ்.சுதந்திர அமல்ராஜ் கூறியதாவது: இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால், மழைக் காலங்களில் கடலில் கலக்கும் நீரை புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் போன்ற வறண்ட மாவட்டங்களுக்கு திருப்பி விடலாம். திட்ட மதிப்பீடு அதிகமாக இருப்பதால் மத்திய அரசுதான் இதற்கு உதவ வேண்டும் என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x