Published : 24 Jun 2019 11:28 AM
Last Updated : 24 Jun 2019 11:28 AM
மதுரையில் தனியார் ஆக்கிரமிப்பால் 15 அடி, 20 அடியாக சுருங்கிய 120 அடி பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நில ஆர்ஜிதம் செய்யாமல் ஆட்சியர் இல்லாத நேரத்தில் அவசரம் அவசரமாக நெடுஞ்சாலைத் துறை 6 வழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகரம், வைகையின் தென் கரையில் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டே அமைந்துள்ளது. காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிக்கவும் வைகை ஆற்றின் வட கரைப்பகுதிகளில் நகரின் எல்லை விரிவடைந்தது.
அதனால், வடகரையில் அமைந்துள்ள கே.கே.நகர், அண்ணா நகர், சர்வேயர் காலனி உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள், விசாலமான சாலைகளுடன் அமைந்தது. ஆனால், நாளடைவையில் இந்த பகுதியிலும் மதுரை மாநகரில் கே.கே.நகர் 80 அடிசாலை, சர்வேயர் காலனி 120 அடிசாலையை தவிர மற்ற சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சுருங்கின.
இந்நிலையில் மதுரையிலே மிக பிரமாண்டமாகவும் விசாலமாகவும் காணப்பட்ட சர்வேயர் காலனி 120 அடி சாலை தற்போது பல இடங்களில் 50 அடிக்கும், 20 அடிக்கும் சுருங்கி உள்ளன. இந்த சாலை, மதுரை-மேலூர் சாலையில் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கி, அழகர்கோயில் சாலை பெட்ரோல் பங்க் முன் முடிவடைகிறது.
இந்த சாலையின் ஆரம்பமான சர்வேயர் காலனி சந்திப்பில் 120 அடி இருக்கிறது. ஆனால், மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையம் எதிரே இந்த சாலை நிறைவடையும் பகுதியில் 15 அடியாக குறைவாக சுருங்கி உள்ளது.
இந்த சாலையில்தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தயா சைபர் பார்க் அமைந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த பார்க்கின் முன் பகுதி சுவர் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக இடித்து அகற்றப்பட்டது. தற்போது வரை இந்த சைபர் பார்க் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது.
இப்படி பல சர்ச்சைகள் நிறைந்த இந்த சாலையில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர்.
அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், சாலையின் இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைத்து புதிய சாலை போடும்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும்,தேவைப்பட்டால் நிலத்தை ஆர்ஜிதம் செய்து சாலையை விரிவாக்கம் செய்யும் என்று உறுதியளித்து இருந்தனர்.
ஆனால், தற்போது ஒரு அடி கூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலே இந்த சாலையில் ஆட்சியர் இல்லாத நேரத்தில் அவசர கோலத்தில் நெடுஞ்சாலைத்துறை 6 வழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த சாலை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையம் எதிரே தொடங்கி, சர்வேயர் காலனி சிக்கனல் சந்திப்பு வரை 6 வழிச்சாலையாகவும், அதன்பிறகு
மூன்று மாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, ஆணையூர், கூடல் நகர் ரேடியோ ஸ்டேஷன் வரை நான்கு வழிச்சாலையாகவும் ரூ. 80 கோடியில் போடப்படுகிறது.
அதற்காக தற்போது இந்த சாலையின் இரு புறமும் காங்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. 2, 3 அடி காங்கிரீட் கால்வாய்க்கு சென்றால் 15 அடி, 20 அடியாக சுருங்கியப் பகுதியில் இந்த 120 அடி சாலை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், 20 அடி சாலையில் எப்படி 6 வழிச்சாலை அமையும் என்ற சர்ச்சையும், குழப்பமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சாமாணியனுக்கு ஒரு நீதியா?
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த 120 அடி சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பல முறை புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சர்வே செய்தபோது ஆக்கிரமிப்பட்டதாக சந்தேகப்படும் இடங்களில் பட்டா வைத்துள்ளனர். அதனால், இந்த சாலை சர்வேயர் காலனி நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் இருந்து சம்பக்குளம் திரும்பும் வரையே 120 அடியாக உள்ளது. மற்ற சுருங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இயல்பாகவே இந்த சாலை அப்பகுதியில் அவ்வளவுதான் உள்ளது" என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மாநகராட்சி சர்வே செய்துதான், எங்களிடம் 6 வழிச்சாலை போடுவதற்கு ஒப்படைத்துள்ளனர். 15 அடி, 20 அடி இருக்கக்கூடிய இடத்தில் இருக்கிற இடத்தில் புதிய சாலை போடப்படும். எந்த நில ஆர்ஜிதமும் எடுக்கப்படாது" என்றார்.
இந்த சாலையில் பல பெரிய நிறுவனங்கள், உள்ளன. ஆக்கிரமிப்புகள் இல்லாவிட்டாலும் 6 வழிச்சாலை அமைக்க தேவைப்படும் இடத்தில் நிலத்தை ஆர்ஜிதம் செய்யலாம். ஆனால், மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் அதை செய்யாமலே புதிய சாலை போடுகின்றனர். இதே சாமாணிய பொதுமக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தால் இந்த சாலை வந்திருந்தால் நோட்டீஸ் விட்டு நிலத்தை ஆர்ஜிதம் செய்து இருப்பார்கள் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT