Last Updated : 22 Jun, 2019 02:58 PM

 

Published : 22 Jun 2019 02:58 PM
Last Updated : 22 Jun 2019 02:58 PM

சோளத்தை சேதப்படுத்தும் படைப்புழுக்கள்: வரப்பு ஓரங்களில் தீவனப்பயிர் வளர்த்து புழுவின் கவனத்தை திசைதிருப்ப அறிவுரை

தினமும் 100 கிமீ. இடப்பெயர்ச்சி, நூற்றுக்கணக்கில் வளர்ச்சி என்று அதீத திறன் கொண்ட அமெரிக்கன் படைப்புழு விவசாயிகளுக்கு வெகுவாய் மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரப்பு ஓரங்களில் மாற்றுப்பயிர், கோடை உழவு, தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட முறைகளை மேற்கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மக்காச்சோளத்தில் பெரிய அளவில் பூச்சித்தாக்குதல் இருக்காது என்பதால் விவசாயிகளுக்கு உரிய லாபத்தை ஈட்டித் தரும் பயிராக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் படைப்புழு தாக்குதல் இப்பயிரை வெகுவாய் உருக்குலைத்து வருகிறது. இதன் தாயகம் மெக்சிகோ. வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா என்று பரவி ஆப்பிரிக்காவிற்கு ஊருடுவியுள்ளது.

எந்த மருந்திற்கும் எளிதில் கட்டுப்படாத இந்த பூச்சியின் தன்மை விவசாயிகளை மிகவும் நிலைகுலைய வைக்கிறது. சுமார் 136பயிர் ரகங்களை தாக்கும் குணம் இதற்கு உண்டு. ஒருநாளைக்கு 100கிமீ.இடம்பெயரும். இதன் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுவதற்காக 400கிமீ. வரை இடம்பெயரும். இதன் முட்டைகளும், உருவாகும் புழுக்களும் ஆங்கிலப்படத்தில் பல்கிப் பெருகும் ஜந்துக்களைப் போல அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். நூற்றுக் கணக்கான முட்டைகளில் இருந்து சில நாட்களிலே கூட்டுப்புழுக்கள் அதிகளவில் உருவெடுக்கும்.

கடந்த ஆண்டு தென்இந்தியாவில் இது ஊடுருவியது. கர்நாடகா பகுதியில் இது கண்டறியப்பட்டது. தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பல்கிப் பெருகியுள்ளது. அதீத பசி கொண்ட இப்புழு தண்டு, இலை, காய் என்று அனைத்தையுமே சிதைக்கும் தன்மை கொண்டது.

பூச்சிக்கொல்லி மருந்து வர்த்தகத்திற்காக திட்டமிட்டு இந்தியாவிற்குள் அனுப்பப்பட்ட பூச்சி என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

வெகுவாய் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் இப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து  தோட்டக்கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கண்ணன் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசியதாவது: கோடை உழவு மிக முக்கியம். அப்போதுதான் மண்ணிற்குள் இருக்கும் கூட்டுப்புழு புரட்டப்பட்டு வெளிப்பகுதிக்கு வந்து வெயில்பட்டு அழியும். அல்லது பறவைகளுக்கு இரையாகும். மக்காச்சோள வயல்களின் ஓரத்தில் தீவனப்பயிரை  (நேத்தியர்) நடலாம். சோள விதைப்பிற்கு 20நாட்களுக்கு முன்பாக இதை நட வேண்டும். இலை பரப்பு அடர்த்தியாய், உயரமாய் வளர்ந்து நிற்கும் இப்பயிர் சோளத்திற்கு கவசமாய் இருந்து காப்பாற்றும்.

வரும் படைப்புழுக்கள் நல்ல இரை கிடைத்ததே  என்று முதலில் அமர்வது இங்குதான். சில நாட்களில் இலை, தண்டு பாதிப்பைக் கண்டறிந்து அச்செடியை அகற்றலாம். அல்லது வேம்பு சார்ந்த மருந்துளைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். கையால் எடுத்து அகற்றி அழிக்கலாம்.

மேலும் சோளத்தில் ஊடுபயிராக தட்டை, பாசிப்பயறுகளை நடலாம். இங்கு வரும் நன்மை தரும் பூச்சிகள் படைப்புழுவை அழித்துவிடும். தினமும் வயலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து படைப்புழுதாக்குதல் இருக்கிறதா.. இலையின் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும் இதன் மூலம் ஆரம்பத்திலேயே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

விதைநேர்த்தி செய்து நடுவதின் மூலமும் இதன் தாக்குதலை களையலாம். வேப்பஎண்ணெய் சார்ந்த மருந்துகள் பூச்சிகளை வீழ்த்தும் தன்மை கொண்டது. பூஞ்சாணம் போல தென்பட்டாலும் உடன் குருத்திற்குள்ளே மருந்து தெளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கை மூலம் இவற்றின் தாக்குதலில் இருந்து வெகுவாய தற்காத்துக் கொள்ளலாம் என்றார்.

அமெரிக்க அடைமொழியுடன் படையெடுத்து தமிழக வயல்வெளிகளை பதம் பார்க்கும் இந்தப்புழுக்களை ஒருங்கிணைந்த வேளாண்மை மூலமும் கட்டுப்படுத்தலாம். எனவே சோள விவசாயிகள் அதீத கண்காணிப்பு, தீவிர செயலாற்றலுடன் இருந்தால் முற்றிலும் கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x