Last Updated : 02 Jun, 2019 12:00 AM

 

Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

சர்வர் பிரச்சினையால் ‘3ஜி’ கையடக்க கருவி பழுது: நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சலகங்களின் சேவை முடக்கம்

இணையதள நெட்வொர்க் கிடைக்காததாலும் சர்வர் பிரச்சினையாலும் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சலகங்களில் 3ஜி கையடக்கக் கருவி இயங்கவில்லை. இதனால் கிராமப்புற அஞ்சல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சலகங்கள் உள்ளன. இங்கு சிறுசேமிப்பு, தொடர் வைப்பு நிதி,அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்,செல்வ மகள் சேமிப்பு, தவணை வைப்புத்தொகை, அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்களில் பணம் செலுத்துவது மற்றும் எடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த விவரங்கள் அனைத்தும் அருகில் இருக்கும் துணை தபால் நிலையங்களின் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.

இதற்காக கிராமப்புற அஞ்சலகஊழியர்கள் தினமும் பரிவர்த்தனை விவரங்களுடன் துணை அஞ்சலகங்களுக்குச் செல்ல வேண்டியநிலை இருந்தது. இதனால் கிராமப்புற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டதுடன், நேரமும் விரயமானது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் சேவை கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதைத்தவிர்க்க கிராமப்புற அஞ்சலகங்களில் மத்திய அரசு ‘தர்பன்’ திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக 6 மாதங்களுக்கு முன்பு கிராமப்புற அஞ்சலகங்களுக்கு கையடக்க மின்னணுக் கருவி வழங்கப்பட்டன.

இக்கருவி மூலம் அனைத்துச் சேவைக்குரிய பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ஒரு சில மணி நேரத்தில் நாட்டின்எந்த மூலைக்கும் பணம் அனுப்பமுடியும். இதுதவிர, முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய வேலைஉறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த கருவி 3ஜி-யில் செயல்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் 4ஜி-யே பலகிராமங்களில் சரியாகக் கிடைப்பதில்லை. மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சினையும் ஏற்படுகிறது. கருவி பழுதடைந்தாலும் சரி செய்து கொடுப்பதில்லை. இதனால் பல இடங்களில் கருவி பயன்பாடின்றி பழைய முறையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் உயரதிகாரிகள் கருவியைப் பயன்படுத்த நெருக்கடி கொடுப்பதால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்த கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கு அஞ்சல் சேவை உடனுக்குடன் கிடைக்கவும், ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும்தான் கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்தக் கையடக்கக் கருவியைப் பயன்படுத்துவதே தற்போது பெரும் சுமையாக மாறியுள்ளது. கருவி 3ஜி-யில் இருப்பதால் இணையம் கிடைப்பதில்லை. சர்வர் பிரச்சினையும் உள்ளது.

இதனால் நள்ளிரவு, அதிகாலையில் பதிய வேண்டியுள்ளது. ஒப்புகைச் சீட்டு கொடுக்க காகிதம் வழங்குவதில்லை. பழுதான கருவிகளைச் சரி செய்து கொடுப்பதில்லை. உடனுக்குடன் பதிந்துஒப்புகைச் சீட்டு கொடுக்க முடியாததால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் குறைகிறது. தொடர்ந்து புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றனர்.

அஞ்சலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கருவியின் குறைபாடுகள் குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். கருவி வழங்கிய நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. விரைவில் 4ஜி-க்கு மாற வாய்ப்புஉள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x