Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
திருச்சி மாவட்டத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகளில் குடிநீர் மற்றும் குடிநீர் பயன்பாடு அல்லாத தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் திருச்சி, லால்குடி, முசிறி, மணப் பாறை என 4 கல்வி மாவட்டங்கள் வருகின்றன. இந்த 4 கல்வி மாவட்டங்களிலும் 1,304 அரசுப் பள்ளிகள், 353 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,657 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் ஏராளமான தனியார் பள்ளிகளும் உள்ளன.
இந்நிலையில், கடும் வறட்சி, மழையின்மை ஆகிய காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலையில், திருச்சி புறநகர்ப் பகுதிகளில் போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான தண்ணீர் கிடைக்காமல் பல்வேறு வகைகளில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:திருச்சி மாவட்டத்தில் உப்பிலியபுரம், தா.பேட்டை, துறையூர், மருங்காபுரி, வையம் பட்டி ஆகிய ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மணப்பாறை, மணிகண்டம், முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய ஒன்றியங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு தண்ணீர் கோரி பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகளிலும் போதிய தண்ணீர் கிடைக்காமல் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வி.பூசாரிபட்டி, டி.இடையப்பட்டி, சமுத்திரம், வந் தலைக்கூடலூர், திருவெறும்பூர் அண்ணாநகர் ஆண்கள் பள்ளி, துறையூர் நகராட்சி, கன்னிவடுகப்பட்டி, சுப்புராயபட்டி ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஓந்தாம்பட்டி, கருங்குளம், பி.மேட்டூர், திருவெள்ளறை, துறையூர் பெண்கள் பள்ளி, என்.பூலாம்பட்டி, வையம்பட்டி, செங்காட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால், பள்ளி மாணவ, மாணவிகளிடம் வீடுகளிலிருந்தே போதிய அளவுக்கு குடிநீர் பாட்டில்களை எடுத்து வரவும், மதிய உணவு எடுத்து வரும் டிபன் பாக்ஸ்களை வீட்டுக்குச் சென்று கழுவவும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும் வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல பள்ளிகளில் விளையாட்டு நேரங்களில் உடலுழைப்பு விளையாட்டுகளை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாணவிகளுக்கு மிகவும் அவசியமான கழிப்பிடங்களுக்கு இயற்கையாகவும், ஆட்கள் மூலமும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களை கவனத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கி குடிநீர் பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகம், அரசுப் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் களையவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்கள், “அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT