Published : 21 Jun 2019 03:18 PM
Last Updated : 21 Jun 2019 03:18 PM
ஆகஸ்ட் 1 முதல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படும் என்று மீண்டும் அறிவித்துள்ளார் அமைச்சர் கந்தசாமி.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை கொண்டுவரப்பட்டது. தற்போது அது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடை கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பில் தொடக்கம் முதலே கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரி அரசு சார்பில் பல முறை பிளாஸ்டிக் தடைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை என்று முடிவு எடுத்து முதலில் அமைச்சர் கந்தசாமி, நிறுவனங்களில் ஆய்வு செய்து சில நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி புதுச்சேரியில் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சந்தித்து மனு தந்தனர். அதையடுத்து மாற்று ஏற்பாடுகள் ஆராய்ந்து ஜூன் மாதம் வரை அவகாசம் தரப்பட்டது. ஜூன் மாதத்தில் கண்டிப்பாகத் தடை செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், அதுபோல் ஏதும் நடைபெறவில்லை.
தற்போது பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. மக்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து அமைச்சர் கந்தசாமி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கந்தசாமி கூறுகையில், "புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து ஆலோசித்தோம். அக்கூட்டத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த முறை பிளாஸ்டிக் தடையில் மாற்றம் இருக்காது. தமிழகத்தில் எந்த வகையிலான 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் புதுச்சேரியிலும் தடை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து 3-வது முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT