Published : 05 Jun 2019 05:47 PM
Last Updated : 05 Jun 2019 05:47 PM

9 ஆண்டுகளுக்குமுன்பு சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகன்: உதவிய நண்பரைக் கொன்றதால் பிடிபட்டார்

கன்னியாகுமரியில், சொத்துகளை அடைவதற்காக சொந்த தந்தையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பன் மாயமான வழக்கு கேரளத்தில் நடந்து வந்தது. அந்த விசாரணையில் வெளியான இரட்டைக் கொலைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஆரையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ஷாஜி.

கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணன் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் தொடக்கத்தில் கிருஷ்ணன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து குமரி மாவட்டத்தின் அருமனை போலீஸார் விசாரித்து வந்தனர்.

ஆனால் சில நாட்களில் கிருஷ்ணனின் உடல் கேரள எல்லைப்பகுதியில் கிடைத்தது. இவ்வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு இழுத்து வந்தது. இதனிடையில் கிருஷ்ணனின் மகன் ஷாஜி, குமரி மாவட்டத்தில் இருந்த குடும்ப சொத்துகளை விற்றுவிட்டு கேரளத்துக்கே குடிபோனார்.

கிருஷ்ணனின் மரணம் குறித்த வழக்கு அப்படியே நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஒருமாதத்துக்கு முன்பு ஷாஜியின் நண்பரான வினு திடீரென மாயமானார்.

இதுதொடர்பாக வினுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கேரளமாநிலம், பாறசாலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது வினு மாயமான அன்று ஷாஜியுடன் சேர்ந்து சென்றதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

விசாரணைக்காக கேரள போலீஸார் சென்றபோது ஷாஜி வீட்டில் இல்லை. இதனைத் தொடர்ந்து ஷாஜி பயன்படுத்தி வந்த செல்போன் மூலம் அவரைக் கண்காணித்தனர். இதில் தொலைபேசி சிக்னல் கன்னியாகுமரியில் இருப்பதாகக் காட்ட, அங்கு சென்ற கேரள போலீஸார் ஷாஜியைப் பிடித்து விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஷாஜி கூறியது குறித்து கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''ஷாஜியின் தந்தை கிருஷ்ணனுக்கு அசையும், மற்றும் அசையாச் சொத்துகள் பல லட்சம் மதிப்பில் இருந்தன. தந்தையின் சம்பாத்திய சொத்து மிகுதியாக இருந்ததனால் ஷாஜிக்கு சிறுபிராயத்தில் இருந்தே கஷ்டம் பற்றியே தெரியவில்லை. மேலும் பொறுப்பே இல்லாமல் நண்பர்களுடன் எப்போதும் குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் சொத்துகளை ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவதாக ஷாஜியை மிரட்டி இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷாஜி, நண்பர் வினு உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து  சொந்த தந்தையான கிருஷ்ணனை அடித்து கொலை செய்திருக்கிறார். போலீஸாருக்குப் பயந்து அவரது சடலத்தை காரில் ஏற்றிச்சென்று அருமனையை அடுத்த தேமானூரில் வீசிச் சென்றிருக்கிறார். கொலை நடந்தது தமிழகம் என்றாலும், உடலை கேரள எல்லையில் வீசிச் சென்றதால் தமிழக போலீஸாருக்கு இவ்வழக்கு குழப்பமாகவே இருந்தது.

கொலையாளி ஷாஜி போலீஸாரின் வளையத்தில் இருந்து தப்பினாலும், அவரது நண்பர் வினுவே அவருக்கு பெரும் குடைச்சலாக மாறினார். போலீஸாரிடம், கிருஷ்ணனை கொலை செய்ததை சொல்லிவிடுவேன் என ஷாஜியை மிரட்டி அவ்வப்போது பணம் பறிக்கத் தொடங்கினார்.

இது எல்லை மீறிப்போகவே வினுவை பணம் தருவதாக வீட்டுக்கு அழைத்த ஷாஜி அவருக்கு மதுவிருந்து கொடுத்து அனி என்னும் தன் நண்பரோடு சேர்ந்து அவரை அடித்தே கொலை செய்திருக்கிறார். வினுவின் உடலை தன் வீட்டருகே இருந்த தோட்டம் ஒன்றில் புதைத்துவிட்டு கன்னியாகுமரிக்கு வந்து இங்கு அறை எடுத்து தங்கியிருந்தார்'' என்றார் காவல்துறை அதிகாரி.

இவ்வழக்கில் ஷாஜி, அவருக்கு உதவிய அனி இருவரையும் கேரள போலீஸார் கைது செய்தனர். வினுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையில் மாயமான வாலிபர் வினுவின் வழக்கு, குமரி மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக மர்மமாக இருந்த கிருஷ்ணன் கொலை வழக்குக்கும் தீர்வைத் தந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x