Published : 06 Jun 2019 03:35 PM
Last Updated : 06 Jun 2019 03:35 PM

நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேசிய அளவில் 5-ம் இடம்; மாநில அளவில் முதலிடம்: கரூர் மாணவர் சாதனை

கரூர் மாணவர் கார்வண்ணபிரபு நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேசிய அளவில் 5-ம் இடம் மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கரூர் கவுரிபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி கவுசல்யா. இருவரும் டாக்டர்கள். இவர்களுக்கு கபிலா என்ற மகள், கார்வண்ணபிரபு என்ற மகன் உள்ளனர். மகள் கபிலா சென்னை மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மகன் கார்வண்ணபிரபு (17). கால்களில் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளி. இவர் நிகழாண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் 500-க்கு 476 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றார்.

கார்வண்ணபிரபு நீட் தேர்வெழுதியிருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வில் 700-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேசிய அளவில் 5-ம் இடமும், மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கார்வண்ணபிரபு பிறவியிலேயே கால்கள் செயல்பாட்டில் குறைபாட்டுடன் பிறந்தார். மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கரூர் ராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கரூர் வெண்ணெய்மலை பரணி பார்க் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்து 500-க்கு 476 மதிப்பெண்கள் பள்ளியில் முதல் 3 இடத்தில் ஒருவராக தேர்ச்சி பெற்றார்.

தந்தை கண்ணன் பேசியபோது, "கார்வண்ணபிரபு சிறுவயதில் இருந்து கல்வியில் நன்கு ஆர்வம் செலுத்தி வந்தார். மாற்றுத்திறனாளியாக ஒருபோதும் எங்களை உணரவைத்ததில்லை. சரியான பாதையைத் தேர்வு செய்து தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு காரணமாக முதல் முறையிலே தேர்ச்சி பெற்றுள்ளார்", என்றார்.

கார்வண்ணபிரபு கூறியபோது, "பிளஸ் 2 தேர்வுடனே நீட் தேர்வுக்கும் தயாரானேன். எம்பிபிஎஸ் முடித்த பிறகு நியூரோ அல்லது மனநல மருத்துவராக விருப்பம். ஜிப்மர் நுழைவுத்தேர்வு எழுதியுள்ளேன். ஜிப்மர் அல்லது சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கப்போகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x